செவ்வாய், 14 ஜூலை, 2015
சிறுகதை
கருப்பு வெள்ளைக் கடவுள்
தேவிபாரதி

பிப்ரவரி 2015 அடவி இதழில் வந்துள்ள என் சிறுகதை இது. 

ஒன்று
மலையுச்சியிலுள்ள முருகன் சன்னதிக்குச் செல்வதற்காக அமைக்கப் பட்டிருந்த ஆயிரத்து நூற்று எண்பத்தேழு கல் படிக்கட்டுக்களில் ஐநூற்று நாற்பதாவது படிக்கட்டுக்கும் நாற்பத்தொன்றாவது படிக்கட்டுக்குமிடையே வெள்ளியங்கிரிப் புதூரைச் சேர்ந்த சுப்பிரமணியக் கவுண்டர் என்னும் பெயரையுடைய பக்தரொருவரால் ஆறாண்டுகளுக்கு முன்னால் இளைப்பாறு மண்டபம் ஒன்று உபயமாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தது. சௌகரியமான மண்டபம். கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட அதன் குளிர்ந்த திண்ணையில் ஒரே சமயத்தில் ஆறேழு பேர் வரை கால் நீட்டிப் படுக்கலாம்தேவஸ்தானம் தன் பங்குக்கு குடிநீர்க் குழாயொன்றை அமைத்துத் தந்திருந்தது. முதிர்ந்த ஊஞ்ச மரங்களாலும் அகன்ற இலைகளையுடைய காத்தாடி மரங்களாலும் சூழப்பட்டிருந்ததால் கடும் கோடையிலும் அங்கே இதமான வெப்பநிலை நிலவிக்கொண்டிருக்கும். குரங்குகளின் தொல்லையைச் சமாளிக்க முடிந்து விட்டால் இளைப்பாறுவதற்கு அது ஓர் அற்புதமான இடம்.

அம்மலையடிவாரத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட பரதேசிகளில் சிலர் அவ்வப்போது அதைத் தமது வசிப்பிடமாக்கிக்கொள்வதுண்டு. பிச்சைப் பாத்திரங்களையும் அழுக்கு மூட்டைகளையும் தரித்திரத்தால் பீடிக்கப்பட்ட உடல்களையும் சௌகரியம்போல் பரப்பி அம்மண்டபத்தைக் குரங்குகளாலும் அண்டமுடியாத இடமாக மாற்றும் வித்தை அப்பரதேசிகளுக்குத் தெரிந்திருந்தது. மண்டபத்தைச் சுற்றி இறைந்து கிடக்கும் உடைந்த மதுப்புட்டி களுக்கும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளுக்கும் பரதேசிகளுக்கும்  தொடர்புண்டா என்பது இதுவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. குருக்கள் களும் மலைஉச்சியில் பிரசாதக் கடை வைத்திருப்பவர்களும் பெரும்பாலான பக்தர்களும் பதின்மூன்று வளைவுகளைக் கொண்ட தார்ச்சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் தவிர மேலும் கீழுமாய்த் தலா ஆறு ட்ரிப் அடிக்கும் இரண்டு மினி பஸ்களும் அம்மலைப் பாதையை அன்றாடம் பயன்படுத்திக்கொண்டிருந்தன. நடந்தே வருவதாக முருகனுக்கு வாக்குக் கொடுத்துவிட்ட சில முரட்டு பக்தர்களுக்கும்  பருத்த உடல் கொண்ட சர்க்கரை நோயாளிகள் சிலருக்கும் மட்டுமே படிக்கட்டுக்கள் பயன்பட்டுக்கொண்டிருந்தன. சுப்பிரமணியக் கவுண்டரும் வேறு சில உபயதாரர்களும் கட்டி வைத்த ஒன்பது மண்ட பங்களில் அடிவாரத்தில் இருந்த இரண்டு மண்டபங்களையும் ஆறாவது தார்ச்சாலை வளைவையொட்டிக் காடு காத்த அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு பழைய மண்டபத்தையும் தவிர மற்றவை கிட்டத்தட்டக் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. வருடமொன்றுக்கு சராசரியாக இரண்டு தற்கொலைகளையும் அதே எண்ணிக்கையிலான கொலைகளையும் இயல்பான மரணங்களையும் அவை சந்தித்துக் கொண்டிருந்தன. ஆறு வருடங்களில் ஒரே ஒரு அசாதாரண மரணமும் நிகழ்ந்திருந்தது. தரிசணத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கி வந்தபோது ஓய்வெடுப்பதற்காக ஐந்தாவது மண்டபத்தில் கால்நீட்டி உட்கார்ந்த மூதாட்டி யொருவரைப் பாம்பு கடித்ததால் ஏற்பட்ட மரணம் அது. பட்டப்பகலில் நடந்த துயரச் சம்பவம். அப்போது அந்த மூதாட்டிக்குத துணையாகக் கோவிலுக்கு வந்திருந்த சிறுவனொருவன் அதை நேரில் பார்த்திருந்தான். கீழிருந்து படிக்கட்டுக்களின் வழியே வேகமாக ஊர்ந்து வந்த பாம்பைப் பார்த்ததும் திகைத்துப் போய்விட்டதாகச் சொன்னான். அச்சத்தின் காரணமாகப் பேச்சுத் தடைப்பட்டிருந்திருக்காவிட்டால்  அவனால் மூதாட்டியை எச்சரித்திருந் திருக்க முடியும். வேறெந்தச் சிந்தனையும் இல்லாததைப் போலவும் மூதாட்டியின் விதியை முடித்து வைப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்ட தைப் போலவும் தென்பட்டது பாம்பு. எங்கிருந்தோ வந்து மூதாட்டி உட்கார்ந்திருந்த மண்டபப் படிக்கட்டில் ஊர்ந்து ஏறி அவளது காலடியில் சுருண்டது. மூதாட்டி அப்போது சற்றுக் கண்ணயர்ந்திருந்தாள். பாம்பின் அரவத்தையோ மூச்சுக்காற்றின் சீறலையோ உணராத அம்மூதாட்டியைக் கொல்வதற்கு பாம்புக்கு எந்தப் பிரயத்தனமும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது தன் வாயைப் பிளந்ததையும் பிளவுபட்ட நாக்கைச் சுழற்றியதையும் சிறுவன் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்தீண்டிவிட்டு உடனடியாகத் தப்பிச்செல்லும் அவசரம்கூட அதனிடம்  தென்படவில்லை. சிரசை உயர்த்திச் சுருண்டு நின்று அவளது பலவீனமான தொண்டையிலி ருந்துஹுக்என ஒரு கேவல் எழுந்ததையும் கடைவாயில் நுரை தள்ளி யதையும் உடல் வெட்டியிழுத்ததையும் பிறகு அடங்கியதையும் பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு அந்த இளைப்பாறு மண்டபத்தின் மூன்றடி உயரமுள்ள திண்ணையிலிருந்து நிதானமாக இறங்கி மேல்நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களில் இரண்டைக் கடந்து வலப்புறமாகத் தாவி காட்டின் அடர்ந்த இண்டம் புதர்களுக்குள் மறைந்தது. சிறுவனை அது பொருட்படுத்தவே யில்லை. அவன் சொன்ன அடையாளங்களை வைத்து யோசித்தபோது அந்த மலையடிவாரத்தில் வசிப்பவர்களுக்கு நாகம் என்பது புலப்பட்டது.

மூதாட்டியின் மரணம் ஆயிரத்து நூற்று எண்பத்தாறு படிக்கட்டுக்களையும் ஒன்பது மண்டபங்களையும் கொண்ட, ஏற்கனவே ஆளரவம் குன்றியிருந்த அந்தப் பாதையைக் கிட்டத்தட்டக் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளியிருந்தது. வெள்ளியங்கிரிப் புதூர் சுப்பிரமணியக் கவுண்டர், தன் வேண்டுதலை ஏற்றுத் தனது ஒரே மகள் அவளோடு ஒன்பதாம் வகுப்புவரை படித்த டெம்போ டிரைவரான நாவித இளைஞனொருவனைக் கூட்டிக்கொண்டு ஓடியிருப்பதற் கான சாத்தியத்தைத் தடுத்துச் நிறுத்தியதற்கான நன்றியறிதலாக  முருகனுக்குக் கட்டி வைத்திருந்த அற்புதமான அந்த இளைப்பாறு மண்டபம் பரதேசிகளால் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் மூதாட்டியின் மரணமே காரணமாயிற்று.

இரண்டு
அந்த மண்டபத்தில்தான் பெருந்தலைவர் காமராஜரின் சடலம் கண்டுபிடிக்கப் பட்டதுஅதைக் கண்டு வந்து மலையடிவாரத்தில் வசிப்பவர்களுக்குச் சொன்னவன் எழுபது வயதைக் கடந்த ஒரு பரதேசி. மலை உச்சியில் முருகன் சன்னதிக்குப் பின்புறம்  உள்ள அன்னதானத் திட்ட மண்டபத்தில் தன் சக பரதேசிகளோடும் சில பக்தர்களோடும் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் கீழே இறங்கிக்கொண்டிருந்தான் அவன். பரதேசி தன்னந்தனி ஆளாக நடந்து வந்தான். மற்றவர்கள் ஏப்பம் விடுவதற்காகவும் ஐந்து மணிக்கு வரும் தேவஸ்த்தானப் பேருந்துக்காகவும் மலை உச்சியிலேயே காத்தி ருந்தார்கள். காமராஜரின் சடலத்தை முதலில் பார்க்க விதிக்கப்பட்டி ருந்தவன் அவன்தான்.

மலையடிவாரத்தில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் பதினாறு கடைகள் அடங்கிய எதிரும் புதிருமான இரண்டு வரிசைகள் இருந்தன. வரிசைகளின் முடிவில் கரும்பச்சை நிறத்தாலான சுவர்களையுடைய தேவஸ்த்தான அலுவலகம் இருந்தது. பக்கத்தில் வனவளத்தின் முக்கியத் துவத்தை உணர்த்தும் அறிவிப்புப் பலகைகள் தொங்கவிடப்பட்ட முதிர்ந்த வாகை மரம். பிறகு ஒரு காலியிடம். அப்பால் இருபதடி தள்ளி சந்தைத் திடல். அக்காலியிடத்தில் சந்தைத் திடலுக்கும் பூஜைப்பொருள் விற்பனை அங்காடி வரிசைகளுக்கும் பொதுவான தூரத்தில் ஒரு சாப்பாட்டுக் கடை. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள புனித நாள்களில் அதில் தக்காளி சாதமும் தயிர் சாதமும் கிடைக்கும். மற்ற நாள்களில் வெறும் டீ தான். பீடியும் சிகரெட்டும் எப்போதும் உண்டு. பரதேசி தனது ஓய்வு நேரங்களை அங்குதான் கழிப்பான்.
பரதேசி ஒரு செயின் ஸ்மோக்கர். அன்றன்றைய வசூலையும் கையிருப்பையும் பொறுத்து இடைவிடாமல் சிகரெட்டோ பீடியோ புகைத்துக் கொண்டிருப்பான்.

முன்பெல்லாம் பரதேசி வாரம் இரண்டு தடவை கஞ்சா அடிப்பான். கஞ்சா விற்பவர்களின் எண்ணிக்கை  அருகிப்போய்விட்டபடியால் அந்த தேவலாகிரி இப்போது கிடைப்பதில்லை. ஆனால் அவனது ரத்தத்தில் அதன் வீரியம் எப்போதும் குறையாமல் இருந்துகொண்டிருந்தது. அதன் விளைவாகச் சில தருணங்களில் அவனது கற்பனா சக்தி நம்பமுடியாமல் பெருகும். விசித்திரமான கனவுகள் காண்பான். மலையிலிருந்து கீழே இறங்கி வரும் போது குரங்குகளுக்கு அஞ்சித் துணைக்கு எம்பெருமான் முருகனையே அழைப்பதுண்டு. முருகனும் அதை ஒரு கடமையாகக் கருதித் தனது தேவியரைச் சற்று நேரம் தவிக்க விட்டுவிட்டு வேலாயுதத்தோடு பரதேசிக்குப் பக்கத் துணையாவான். உண்மையில் பரதேசியின் அது குருதியில் கலந்த கஞ்சாவின் துணை. அன்று துணைக்கு வர முருகனுக்கு அவகாசம் கூடவில்லை. பரதேசி தன்னந் தனி ஆளாக இறங்க வேண்டியிருந்தது. எங்கும் நில்லாமல் வெள்ளியங்கிரிப் புதூர் சுப்பிரமணியக் கவுண்டரின் உபய மண்டபம் வரை வேகமாக இறங்கி வந்தவன் அங்கு சற்றுக் கண்ணயர நினைத்தான்.

அப்போதுதான் கிரானைட் பதிக்கப்பட்ட அதன் திண்ணையில் ஏறத்தாழ அதன் முழுப் பரப்பையும் ஆக்கிரமித்துக்கொண்டு காமராஜரின் சடலம் கிடந்ததைப் பார்த்தான்.

முதலில் அது காமராஜர் என்றோ சடலம் என்றோ பரதேசி கற்பனை செய்துகொள்ளவில்லை. முருகனைத் தரிசிக்க வந்த யாரோ ஒரு பக்தன் எனக் கருதியவன் தொந்தரவு செய்யாமல் அவரைக் கடந்து செல்ல விரும்பினான்ஆனால் அந்த மனிதரின் தோற்றத்தில் தென்பட்ட அசாதாரணம் பரதேசியின் ஆர்வத்தைத் தூண்டியது. கன்னங்கரேலென்ற நெடிய உருவம். குறைந்தது ஆறடியாவது இருக்கும்.   மல்லார்ந்து கால்களிரண்டையும் நீட்டியவாக்கில் படுத்திருந்தார். பார்க்க ரங்கநாதரைப் போல்தான் இருந்தது. கண்களைப் பறிக்கும் தூய வெள்ளையில் கதர் வேட்டி. தொளதொளப்பான முக்கால் கைக் சட்டை. துண்டை நான்காக மடித்துப் பின்மண்டைக்குக் கொடுத்திருந்தார். பக்கத்தில் வெளிறிய நிறத்தில் காந்தியின் படம் அச்சிடப்பட்ட துணிப்பை யொன்று கிடந்தது. அதன் உப்பிய கோலத்தைப் பார்த்து உள்ளே ஏதாவது இருக்க வேண்டும் என நினைத்தான் பரதேசி. ஆளரவமற்ற, மொந்தை மொந்தையான உடல்களையுடைய மந்திகள் நடமாடும் இநத இடத்தில் இப்படி அலட்சியமாக வந்து படுத்துக்கொண்டிருக்கிறாரே இந்த மனிதர் என நினைத்து அவரை நெருங்கி முகத்தைப் பார்த்துத் தாளமுடியாத அதர்ச்சிக்குள்ளானான் பரதேசி.

அது பெருந்தலைவர் காமராஜர்தான். தோற்ற ஒற்றுமைகொண்ட வேறு யாரோ அல்ல. பல கோணங்களில் நின்று பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட உண்மை அது.

பரதேசிக்குக் குப்பென்று உடல் முழுவதும் வியர்த்துவிட்டது. மயிர்க்கால்கள் சில்லிட்டு, வற்றி, ஒடுங்கி பூனையைப் போல விரைத்த உடலுடன் நின்று அவரைக் கூர்ந்து பார்த்தான். அது கற்பனை. தன் குருதியில் உள்ளுறைந்து கிடக்கும் போதையின் விளைவான மனப்பிறழ்வு எனக் கற்பிதம் செய்துகொண்டு தன்னை மீட்டுத் திடப்படுத்திக் கொள்ள முயன்றான். பார்க்கப் பார்க்க தனது மனப்பிறழ்வின் தீவிரம் கூடிக்கொண்டே போவதை அறிந்த பரதேசி உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்வதைப் பற்றியும் யோசித்தான். சூழ்ந்திருந்த மரக்கிளைகளில் தொற்றி நின்ற வானரப்படை தன்னை அல்ல அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவன் ஏதாவது செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தான். உறக்கத்தின் ஆழியில் மூழ்கிப் பிரக்ஞையற்றுக் கிடக்கும் அந்த மா மனிதனுக்கு வானரங்களால் ஏதாவது தொந்தரவு ஏற்படுவதை அனுமதிப்பதைவிடக் கொடிய பாவம் வேறில்லை எனத் தோன்றியது பரதேசிக்கு. பிறகு அவன் எண்ணிய விடுதலை, கதி மோட்சம் கைகூடுவதற்கு முக்காலத்திலும் வாய்ப்பில்லை. சாதாரணமான ஒரு செயல். “கொரங்கு நெறையா இருக்குது, பாத்து இருங்கஎன வெறுமனே எச்சரித்தால்கூடப் போதும். அவன் அவரை அழைக்க  நினைத்தான்.
எப்படி அழைப்பது?

தலைவரே என்றா? பெருந்தலைவரே என்றா? பரதேசி யோசித்தான். திடீரென நாடார் ஐயா என்று அழைப்பது என முடிவெடுத்தான். அந்தரங்கமான நண்பர்கள் அவரை அப்படித்தான் அழைத்தார்கள். அதைப்பற்றி அவன் படித்திருக்கிறான். அதைவிட அதிகமாகக் கேள்விப்பட்டுமிருக்கிறான். அப்படி அழைப்பதில் இடைவெளிகளைக் குறைக்கும் ஒருவித நெருக்கம் இருக்கிறது. மிகத் தயங்க வேண்டியிருக்கும் என்றாலும் அவனாலும் அவரை அப்படி அழைக்க முடியும். கைக்கெட்டாத் தொலைவில் எங்கோ கண்காணாமல் இருந்துகொண்டிருந்தவர் இவ்வளவு நெருங்கி வந்திருக்கிறார். பெரும்பேறு இது. பரதேசியின் மனம் துள்ளியது. விடுதலை அப்போதே கைகூடிவிட்ட கற்பனை. ஆனால் கதிமோட்சம் என்பது இனிக் கற்பனையில்லை. தன்னையும் இவ்வுலகையும் கடைத்தேற்றும் ஓர் அற்புத நிகழ்வுக்கு அவன் சாட்சி. அவனே அதைக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்பவனாகவும் இருப்பான். பரதேசி தன்னை மறந்தான். காலத்தையும் மறந்தான்
ஐயா
ஐயா, நாடார் ஐயா
நாடாரய்யா கொஞ்சம் கண்ணெத் தெறங்க
நாடாரய்யாவிடம் எந்தச் சலனமும் இல்லை.
குரலைச் சற்று உயர்த்தினான். மேலும் உயர்த்தினான். எதற்கும் அசைவில்லை. பிறகு தொண்டையைச் செருமிக்கொண்டு வனம் நடுங்க ஒரு பெரும் கூச்சல்.
நாடாரய்யாஆஆஆஆ

பரதேசி திகைத்துப் போனான். ஒரு கணம் தன் வழியைப் பார்த்துக்கொண்டு போய்விடலாமா என்றுகூட யோசித்தான்.

அது மனசாட்சியற்ற செயல். ஒரு முதியவர், மாமனிதர் எனப் போற்றப்படுபவர், இந்த நட்டநடுக்காட்டில் அவரை நிராதரவாகவிட்டுவிட்டுப் போவது கொடுங் குற்றம். பிறகு நரகமே கிட்டும்.
பரதேசி அவரை ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறான். ஒரே ஒரு முறை. அவனுடைய சொந்த ஊரில். அவன் எட்டாம் வகுப்போ ஒன்பதாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்தான். திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக அப்போது அவர் அந்த ஊருக்கு வந்திருந்தார்அவர் மீது அவன் மிகுந்த மரியாதை வைத்திருந்தான். கல்விக் கண் கொடுத்த தெய்வம்  என்று அவனுடைய தாய் அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த தெய்வத்தை நேரில் பார்க்கும் ஆவலில் அவன் அந்த விழாவுக்குப் போயிருந் தான். கூட்டம் அதிகம். எனினும் முண்டியடித்துக்கொண்டு மேடைக்கு அருகில் போவதற்கு அவனால் முடிந்திருந்தது. அவன் அவரது பார்வையின் நேர்க்கோட்டில் கீழே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தான். மேடை யில் யார் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். உரக்கக் கத்திக்கொண்டிருந் தார்கள். அறைகூவல்களும் சவால்களும் காற்றைப் பிளந்து கொண்டிருந்தன. அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டார். முகத்தில் கசப்பு மண்டிக் கொண்டிருந்தது. அவமானத்துக்குள்ளானவரைப் போல அடிக்கடி கண்களைத் தாழ்த்திக்கொண்டார். அவன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்ஒரு தருணத்தில் தற்செயலாக அவரது கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது அவனுக்கு. அவருங்கூட அவனைக் கவனித்தது போல் தோன்றியது. பிறகு என்ன காரணத்தாலோ அவரது பார்வை அவன் மீது கவியத் தொடங்கியது. அவரது கண்களின் ஒளி கற்றையாக எழுந்து தன்னைத் துளைப்பது போல அவன் கற்பனை செய்துகொண்டான். கண்களைச் சிமிட்டக்கூடத் தோன்றவில்லைபரவசத்தில் மூழ்கி அவரை ஊடுறுவிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்பிறகு அவன் வேறெதையும் பார்க்கவில்லை.

கூட்டம் முடிந்து அவர் புறப்பட்டபோது பின்தொடர்ந்து முண்டியடித்த கூட்டத் தோடு சேர்ந்து அவன் அவரை நெருங்கினான். எல்லோருக்கும் அவரைத் தீண்டிப்பார்த்துவிடும் ஆவல். கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தனக்காகக் காத்திருந்த காரோட்டியை அவர் பொருட்படுத்தவில்லை. சிலர் அவரது கைகளைப் பற்றிக் குலுக்கினார்கள். வேறு சிலருக்கு அவரது வைரம் பாய்ந்த தேகத்தின் ஏதாவதொரு அணுவைத் தீண்டும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கே அவர்களது முகங்களில் பரவசம். அவரைத் தீண்டும் ஆசையில் அவன் தன்னைச் சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பிளக்க முயன்றான். கிடைத்த இடைவெளிகளில் தன் நோஞ்சான் உடம்பைப் புகுத்துவதற்கும் முற்பட்டான். பிறகு குனிந்து பரிதவிப்போடு அலைந்துகொண்டிருந்த பல ஜோடிக் கால்களுக் கிடையில் புகுந்து நெருங்கியபோது அவர் காருக்குள் உட்கார்ந்திருந்தார். அறைந்து சாத்தப்பட்ட கதவை எட்டிப் பிடித்து நிறுத்தவும்கூட அவன் துணிந்தான். ஆனால் கார் புறப்பட்டிருந்தது.

உலகின் மகத்தான மனிதர்களுள் ஒருவரைத் தீண்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பு அவ்விதம் கைநழுவிப் போயிருந்தது. அவன் அதற்காகப் பல நாள்கள் வரை அழுதுகொண்டிருந்தான். அதைப் பார்த்த அம்மா கோபப்பட்டாள்.

பைத்தியகாரா இதுக்குப் போயி ஏன்டா இப்பிடி அழுதுக்கிட்டிருக்கறே? எந்துருச்சு வந்து சோத்தத் தின்னு

சொல்லிவிட்டுக் காணாததைக் கண்ட அதிசயத்துடன் பெருங்குரலெடுத்துச் சிரித்தாள்.

அந்த வாய்ப்பு மட்டும் அப்போது கை நழுவிப்போகாமல் இருந்திருந்தால் அது அவன் பெற்ற பேறுகளில் ஒன்றாக இருந்திருக்கும். பிறகு அவன் பாவங்களால் சூழப்பட்டிருக்க மாட்டான். கொடிய துரோகங்களுக்கு மனம் துணிந்திருக்காது. குற்றங்களின் மூர்க்கமான பிடிகளுக்குச் சிக்காமல் தப்பியிருந்திருக்க முடியும். பரதேசியாக மாறி, சோற்றுக்கு இறைஞ்சிப் படிக்கட்டுக்களிலும் உபய மண்டபங்களிலும் அலைந்து திரிந்துகொண்டிருக்கும்படி நேர்ந்திருக் காது. நினைவுகளின் குத்தல்களிலிருந்து தப்புவதற்காகக் கஞ்சாவின் போதைக்குள் புதையுண்டு போக வேண்டிய சாபத்துக்கும் இரையாகியிருந் திருக்க வேண்டியதில்லை.

கைநழுவிப் போன அப்பெரும்பேறு சற்றும் எதிர்பாராத வகையில் இப்போது கைகூடி வந்திருக்கிறது. வெறும் தீண்டல் அல்ல, அவரது உடம்பின் ஏதோ ஒரு அணு அல்ல. மகத்தான அந்த மனிதன் இப்போது தன் முழு ஆகிருதியுடன் இங்கே கைக்கெட்டும் தொலைவில் கால் நீட்டிப் படுத்திருக் கிறான். இப்போது அவரைத் தழுவிக்கொள்ளக்கூட முடியும். பிறகு பரதேசி யின் அணுக்களில் கல்லாகி உறைந்திருக்கும் உயிர் உருகியெழும்.

புரிந்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். மீட்சிக்கான சாளரங்கள் திறக்கும்சாப விமோசனம்.

இப்படிக்கட்டுக்களும் உபய மண்டபங்களும் உடுத்தியுள்ள துவராடையும் ஏந்தியுள்ள திருவோடும் ஒருபோதும் விடுதலையைத் தரப்போவதில்லை. அவன் புகல் கொண்ட முருகக் கடவுள் மீட்சிக்கான சாளரங்களைத் திறந்து வைப்பவனுமல்ல. வெறும் கல். பாவிகளே மயில்வாகனனைத் தொழு பவர்கள். பாலும் தேனும் சந்தனமும்கொண்டு அவனைக் குளிர்விப் பவர்கள்வழிபாடு ஆன்ம விடுதலையல்ல, பேரம். திருடர்களும் கள்ளச் சந்தைக் காரர்களும்  மோசடிப் பேர்வழிகளும் தரகர்களும் சூதாடிகளும் வேசிகளுமே இங்கு வருபவர்கள். மனமுருக வேண்டுவது கொள்ளை லாபம் பார்க்க. வேண்டுதல் பலித்துவிட்டால் வெற்றி வேல் முருகனுக்குக் கொள்ளை யில் மனமுவந்து ஓர் அற்பப் பங்கு. உபயமாக ஒரு வெள்ளி வேல் அல்லது இளைப்பாறு மண்டபம். பரதேசி தானே அப்படிப் பேரம் பேசியவன்தான். பெற்ற லாபத்தைக் காத்துக் கிடக்கும் தெய்வங்களுக்குக் கிள்ளிக்கொடுத்தவன்.

சட்டியில் உள்ளதைத்தானே அகப்பையில் அள்ள முடியும்?
பரதேசி சில நாள்களில் நகர் வலம் போவான்.

இவ்வாழ்க்கையின் பின்னால் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பவர்கள் யாரும் நகர்வலம் போகும் பரதேசியைக் கவனிப்பதில்லை. ஆனால் பரதேசி எல்லாவற்றையும் கவனிக்கிறான். நெரிசல் மிகுந்த தெருக்களில் நிராசை யோடு அலையும் வறியவர்களை, துர்நாற்றத்தைப் பற்றிய கவலையின்றிப் பெருகிவழியும் சாக்கடையோரங்களில் மல்லார்ந்து கிடக்கும்  பைத்தியக் காரர்களை, சில்லறையைக் குலுக்கிக்கொண்டு தம் பஞ்சடைந்த பார்வையால் எல்லோரையும் பின்தொடர்ந்துகொண்டிருக்கும் பிச்சைக்காரர்களை, வற்றிய முலைகளோடு இருளுக்குள்ளிருந்து அழைக்கும் வேசிகளை, தட்டுத் தடுமாறிக்கொண்டு எங்கிருந்தாவது புறப்பட்டு ஏதாவதொரு இடத்துக்குச் செல்ல முற்படும் முதியவர்களை, வீறிட்டழும் குழந்தைகளை, துதித்துக் கொண்டிருக்கும் முடவர்களை, யார் மீதாவதோ எதன் மீதாவதோ மோதிக்கொண்டு சரியும் குருடர்களை, மழிக்கப்பட்ட முகங்களோடு கண்ணாடி வளையல்கள் குலுங்கக் குலுங்கக் கைகளைத் தட்டி அச்சுறுத்தும் பாவனையில் பிச்சை கேட்கும் அரவாணிகளை, கூவியழைக்கும் வியாபாரிகளை, முகத்தைச் சுழித்துக்கொண்டு எல்லாவற்றையும் கடந்து செல்லும் செல்வந்தர்களைகல் போல் இறுகிய முகங்களுடன் நடமாடும் முகம் கடுத்த அதிகாரிளை, நம்பிக்கையூட்டும் வாக்கியமொன்றை உச்சரித்தபடிக் கள்ளச் சிரிப்புடன் விடைபெறும் தலைவர்களை, கரகோஷ மெழுப்பும் எழுப்பும் தொண்டர்களை, பிளாட்பாரங்களை, கடைத்தெருக்களை, பள்ளிக்கூடங்களை, வணிக வளாகங்களை, பூங்காக்களை, பேருந்து நிலையங் களை, திரையரங்குகளை, காவல்நிலையங்களையாராவது யார் மீதாவது வசைமாரிப் பொழிவதை, யாராவது எதையாவது அடித்து நொறுக்குவதை, யாரோ ஒருவருடைய காயங்களிலிருந்து குருதி பெருகுவதை, யாரோ ஒருவன் களவாடப்படுவதை, யாரோ ஒரு சிறுமி புதர்களுக்குள் தூக்கிச் செல்லப்படுவதை, ஏதாவதொரு மறைவிடத்தில் யாராவது கொல்லப்படுவதை, யாராவது யாரையாவது துரத்துவதை, யாராவது தப்பிச் செல்வதை, யாராவது தற்கொலை செய்துகொள்வதை, யாரோ ஒருவருடைய ஓலத்தை, யாராவது யார் மீதாவது கருணை காட்டுவதைப் பரதேசி அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான்பெருமூச்சு விடுகிறான். திருவோட்டில் விழும் ஒவ்வொரு பருக்கையும் பாவங்களின் ஒவ்வொரு கவளம் என நினைத்துக்கொள்கிறான். அதுபோன்ற தருணங்களில் கசப்பானதாகவோ வேறு எவ்விதமாகமோ அவனது உதடுகளில் புன்னகை அரும்புகிறது.
வாழ்வதே குற்றம் எனத் தோன்றியது பரதேசிக்கு.

வாழ்வது குற்றமென்றால் வாழ்வு சாபமென்றாகும். கொடிய சாபம்.

கோவணாண்டியானாலும் பெரும் பணக்காரனானாலும் அதிலிருந்து தப்ப வழியில்லை என நினைத்தான் பரதேசி. தனது தகன மேடையில் எஞ்சியி ருந்த பிடி சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்து தூய்மையின் அடையாளமான கதராடையுடுத்த மேனியனாய் உபய மண்டபத்தில் கால்களை நீட்டி மல் லார்ந்து கிடக்கும் இம்மாமனிதனின் கரங்கள் ஒருவேளை விமோசனத் திற்கான சாளரங்களைத் திறந்து வைக்கலாம்.

அதற்கு முதலில் அவர் அரிதுயில் நீங்கி எழ வேண்டும்.  

பரதேசி அவரை நெருங்கினான்.

நடுங்கும் விரல்களால் சில்லிட்டு விரைத்துப்போயிருந்த அந்த உடலைத் தொட்டான்.

மூன்று

மாஸ்ட்டர் தனது வாடிக்கையாளர்கக்காகக் காத்திருந்தான். அது எந்தப் புனிதமும் அற்ற ஒரு நாள். புனிதமற்ற நாள்களில் யாரும் தெய்வத்தை நினைக்க வேண்டியிதில்லையென்பதால் பக்தர்களின் வருகையை மாஸ்ட்டர் எதிர்பார்ப்பதுமில்லை. புனிதமற்ற நாள்களில் சோற்றுக்கு வீங்கிய பரதேசிகளே மலைமீது ஏறுகிறார்கள். வயிறு புடைக்கத் தின்றுவிட்டுக் கீழே இறங்கி வரும்போது ஒரு டீ குடிக்கிறார்கள். சிகரெட்டோ பீடியோ வாங்குகிறார்கள். சில்லறை அதிகமாகச் சேர்ந்திருந்தால், “ரண்டு டீ, ரண்டு வடை, சிசர் பில்டர் ஒரு பாக்கெட்இல்லாவிட்டால், “ஒரு ரூபாய்க்குப் பத்தாம் நம்பர் பீடி”. சில சமயங்களில் அதையும் கடனாகக் கொடுக்க வேண்டியிருக்கும். “இன்னைக்குத் தரித்திரம் புடிச்சவனுகளா வாறானுக. தட்டங் காணிக்கைக்கே பழைய எட்டணாவக் கொண்டாந்து போடறானுக. முருகனுக்கே தரித்திரம். பரதேசிக்கு யாரு போடுவா?” எனக் கடன் வாங்குவதற்குக் காரணம் கற்பிக்கிறார்கள் பரதேசிகள். மாஸ்ட்டர் அந்தப் பரதேசிகளுக்காகவே காத்திருந்தான். இன்னும் ஒன்றரை லிட்டர் பால் மிச்சமிருக்கிறது. தட்டில் உலர்ந்து, கல் போல் இறுகிய பத்துப் பணிரெண்டு வடைகள். பின்புறக் குடிலில் பகல் நேரப் புணர்ச்சி தந்த களைப்பில் மனைவி தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

பிள்ளைகளைக் காணோம்

தரித்திரம் புடிச்சதுகள்எனத் தொடர்ந்து முணுமுணுத்துக்கொண்டிருந்தான் மாஸ்ட்டர். ஒரு குளியல் போட்டாலென்ன எனவும் யோசித்தான். யோசனை குளியலைப் பற்றியதல்ல. தண்ணீர் பற்றியது. பொடக்காணியில் உள்ள சிமெண்ட் தொட்டியில் இருந்த சிறிதளவு தண்ணீர் இருவருக்கும் புட்டங் களைக் கழுவிக்கொள்வதற்கேகூடப் போதவில்லை. கவுச்சி வாடையால் உடல் நாறிற்று, “ஒரு ரண்டு கொடம் தண்ணியெடுத்துத் தாஎனக் கேட்டதற்கு, “ஹுக்கும்எனத் தோள்பட்டையில் முகத்தை இடித்துக்கொண்டு போனாள் மனைவி.

மாஸ்ட்டருக்கு ஆத்திரம் பெருகிற்று.

மொவறயப் பாரு, கொரங்காட்டஎன அவளுக்கு ஆத்திரமூட்டும் ஒரு வாக்கியத்தை வீசியெறிந்துவிட்டு டீ மேசைக்கு வந்தான்.
எம்பட மொவறக்கு என்ன? இப்ப உனக்கு நா கொரங்கு. சித்த நேரத்திக்கு முன்னால எப்பிடித் தெரிஞ்செ?” என உரத்த குரலில் அவள் அவனுக்குப் பதிலடி தந்தாள். பிறகு அங்கிருந்து எந்தச் சத்தமுமில்லை.

புனித நாள்களில் இப்படி இருக்க முடியாது. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம்  எழுந்துவிட வேண்டும். அந்த நேரத்தில் அடி பைப்பில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. மாஸ்ட்டர் ஏழெட்டுப் பிளாஸ்டிக் குடங்களை எடுத்துக்கொண்டு போவான். பம்ப் அடித்து ஒவ்வொரு குடமாக நிரப்பி வைப்பான். தூக்கக் கலக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டிருக்காதபோதும் பிள்ளைகள் இருவரும் சிணுங்கிக்கொண்டே அவற்றை வீடு கொண்டு வந்து சேர்ப்பார்கள். ஆறேழு குடத்துக்குப் பிறகு மாஸ்ட்டருக்கு மூச்சிறைக்கும்அந்த நேரத்தில் மாஸ்ட்டரின் மனைவி அடுப்பை மூட்டியிருப்பாள். மலையேறிவிட்டு இறங்கிவரும் பக்தர்களின் பசிக்கு எதையாவது செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தக்காளி சாதத்துக்கும் தயிர்சாதத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். தரிசணத்தை முடித்துவிட்டுப் பதினோரு மணிக்கெல்லாம் பசியுடன் இறங்கிவரத் தொடங்கியிருப்பார்கள். கூட்டம் தணிய நள்ளிரவாகிவிடும். பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு சைக்கிளில் குடங்களைக் கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு நல்ல தண்ணீரைத் தேடி நகரம் முழுவதும் சந்து சந்தாக அலைய வேண்டியிருக்கும். படுக்கையில் விழும்போது நேரம் என்னவாக இருக்கும் என்பதை மாஸ்ட்டர் ஒருபோதும்  கவனித்ததில்லை.

படுத்தவுடன் கரிப்புகை மண்டிய தணிவான கூரையைக்கொண்ட மிகச்சிறிய அந்த வீட்டுக்குள் குறட்டையின் பேரொலி சூழும். சில நாள்களில் மனைவி
யுடனான சண்டையால் நிரம்பும். அப்போதெல்லாம் அவள் அவனைவிட்டுப் போய்விடப் போவதாக அச்சுறுத்துவாள். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டுவாள்மண்ணெண்ணெயைத் தலையில் சரித்துக்கொண்டு தீக்குச்சியை உரச முயன்றுகொண்டிருப்பாள். அதுபோன்ற தருணங்கள் மாஸ்ட்டருக்குப் பயங்கரமானவை. அவனை மனப்பிறழ்வின் செங்குத்தான படிக்கட்டுக்களில் அழைத்துச் செல்பவை. சண்டை முடிவுக்கு வர இருவருக்குமே சோர்வு மிக வேண்டும். குரல் வலுவிழந்து கண்கள் இருள வேண்டும்அல்லது அவளுடைய இரு பிள்ளைகளில் யாராவதொருவர் விழித்துக்கொண்டு மருளும் கண்களுடன் எழுந்து உட்கார்ந்துகொள்ள வேண்டும். அப்போது அவள் பீதியடைவாள். எவ்வித உடன்படிக்கை யுமில்லாமல் திடீரெனப் பின்வாங்கிக்கொண்டு மிகச் சிறய அவ்வீட்டின் இருள் மண்டிய மூலையொன்றில் முடங்கிவிடுவாள். மாஸ்ட்டர் எழுந்து வெளியே வந்துவிடுவான். வாடிக்கையாளர்களுக்குரிய மரப் பெஞ்சுகளில் ஒன்றில் தன் லுங்கியைக் காலோடு தலையாக இழுத்துப்போர்த்துக்கொண்டு கொசுக்களின் பிடுங்கலைப் பொருட்படுத்தாது கொஞ்சமேனும் தூங்குவதற்கு முயல்வான். தெருவில் யாராவது குடங்களுடன் நடமாடத் தொடங்கும் அரவம் அவனை விழித்ததெழச் செய்யும்வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து குடங்களைச் சேகரிக்கத் தொடங்கிவிடுவான். குடிசையின் படலைத் தள்ளித் தெருவிளக்கின் வெளிச்சத்தைப் படரச் செய்து, “பசங்கள எழுப்பியுடுஎனத் தடித்த குரலில் அவளுக்குச் சொல்லிவிட்டு அடி பைப்பை நோக்கிப் பதற்றத்துடன் விரையத் தொடங்குவான். அவள் பிள்ளைகளைத் தட்டி எழுப்பி குடங்களுடன் அவனைப் பின்தொடர விட்டுவிட்டு அடுப்பைப் பற்ற வைக்க முனைவாள். பிறகு ஏதாவதொரு தருணத்தில் மலைமேலிருந்து கந்தர் சஷ்டி ஒலிக்கத் தொடங்கும். அது செவிகளில் விழும் முதல் கணத்தில், “அப்பனே, ஆண்டவா, முருகாஎன முணுமுணுப்பதற்கு இருவரில் யாருமே தாமதிப் பதில்லை. அவள் அடுப்படியிலும் அவன் அடி பைப்பிலும் என வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் இருவருடைய முணுமுணுப்பும் காற்றின் ஏதாவதொரு புள்ளியில் சந்தித்தது இணையத் தவறியதில்லை.

புனிதமற்ற நாள்கள் மாஸ்ட்டருக்குப் பயனற்றவை.

செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். டீயோ பீடியோ கேட்டு வரும் வாடிக்கையாளர்களிடம் ஏதாவது பேச்சுக்கொடுத்துக் கொண்டே மீந்திருக்கும் வடை, போண்டாக்களில் ஒன்றிரண்டையாவது தள்ளிவிட்டுவிட வேண்டும். மிஞ்சியதை இரவு ரசத்துக்குக் கடித்துக்கொள்ளலாம். பிற்பகல் மூன்று மணிக்கு தறிகாரர்களில் சிலர் வருவார்கள். தறிகாரர்களுக்குப் பேச்சே உயிர். வரும்போதும் வந்து உட்கார்ந்திருக்கும்போதும் டீ குடித்துவிட்டுத் திரும்பிச் செல்லும்போதும் பேச்சு.

விஷயந் தெரியுமா நம்ம மோகன் அந்த சுருட்டத் தலக்காரியக் கூட்டிக்கிட்டு ஓடீட்டே?”

எந்தச் சுருட்டத் தலக்காரி?”

மேக்கால பொரச மேட்டுல இருந்து வருவாளே, ஏயெம்மாரு பட்டறைல நூல் போட்டுக்கிட்டிருந்தாளே, செவந்தாப்பல கொஞ்சொ ஒசரமா இருப்பா

அவளா?”

அவதே

அவ ஊரறிஞ்ச தேவுடியாளாச்சே?”

சும்மா வாய்க்கு வந்தாப்பல தேவுடியா கீவுடியான்னு பேசாத

தேவுடியாளத் தேவுடியான்னு சொல்லாம வேற எப்படிச் சொல்றது?”

நீ கண்டயா? காங்காம ஒரு பழம பேசப்படாது

அதெல்லா கண்டுதேம் பேசுது

செரி இருந்துட்டுப் போவுட்டு, நம்புளுக்கென்ன? அவவ தேவைக்கு அவவ போறா

அதச் சொல்லு

மோகனுக்குப் பொண்டாட்டி புள்ளையிருக்குதே, அதிலீமு ஒண்ணு பொட்டப் புளள. இன்னார வயுசுக்கே வந்துருக்குமாப்பறொ?”

அவ இனி என்ன பண்ணுவாளோ காணா

எவொ?”

மோகம் பொண்டாட்டி

இவனாட்ட அவளுமு எவனையாச்சுங் கூட்டிக்கிட்டு ஓட வேண்டீததுதே

அல்லாரு அப்பிடியே இருப்பாங்களாக்கு?”

எந்தப் பொம்பள பொறக்கீல தேவடியாளா பொறக்கறா? சந்தர்பஞ் சூழ்நெல என்னமோ அப்பிடிக் கொண்டு போயி உட்டுறுது

அது செரியே, என்ன பண்ணுவா பாவம். இந்தத் தெல்லவாரி உட்டுட்டு வந்தாப்பல அவ உட்டுப்புட்டு வர முடியுமா? பெத்தவ, எதையாவதொண்ணப் பண்ணிக் காப்பாத்தத்தான பாப்பா?”

எதுக்கப்பா பொளப்பத்த பேச்சுப் பேசிக்கிட்டிருக்கறீங்க? அவனவம் பொளப்பே இங்க நாறிக்கெடக்குது. இன்னத்த நாத் தேரு. கைல சல்லிப் பைசாவக் காணா. எவங்கிட்டப் போயித் தலையச் சொறிஞ்சுக்கிட்டு நிக்கறதுன்னு தெரீல

சொறியறதுக்கு மசுரு வேணுமல்லொ? சட்டியக் கவுத்து வெச்சாப்பல மண்டைய வெச்சுக்கிட்டு எனத்தச் சொறியறது?”

பேச்சு வளரச் சிரிப்புயரும்.

மாஸ்ட்டர் அவர்களோடு சேர்ந்து சிரிப்பான்நகரின் ஏதாவதொரு டீக்கடையில்  தன்னைப் பற்றியும் இப்படிப் பேசிச் சிரிப்பதற்கு யாராவது இருப்பார்களா என யோசிப்பான். அதுபற்றிய கற்பனைகள் பயங்கரமாகப் பெருகும். கசப்பு விழுங்க முடியாத அளவுக்குத் தீவிரம் கொள்ளும். பிறகு அவன் மௌனமாகிவிடுவான். கடையைச் சீக்கிரமே எடுத்து வைத்துவிட்டு மனத்தின் புயலைத் தணிக்கப் பரதேசியைத் தேடிக்கொண்டு போவான். அடிவாரக் காட்டின் தனிமையில் ராட்சத ஆமையொன்றின் கவிழ்ந்த உடலைப் போலத் தட்டையாகக் கிடக்கும் பாறையொன்றின் மீது மண்டியிட்டு உட்கார்ந்தபடி இருவரும் குடிப்பார்கள். போதை மிகும்போது மாஸ்டர் கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிடுவான்.

தப்புப் பண்ணிப்புட்டெம் பெருசு, பெரிய தப்புப் பண்ணிப்புட்டெ. பொண்டு புள்ளைகள உட்டுப்புட்டு இவளோட வந்துட்டனே, அங்க அதுக செத்துதா பொளச்சுதான்னே தெரீலியே

அழுவாத மாஸ்ட்டர், எல்லாஞ் செரியாப் போயிரும்

என்ன செரியாப் போயிரும் பெருசு?”

ஆறுதலை வேண்டுபவனைப் போலத் தன் வாழ்வின் எல்லா ரகசியங் களையும் வெட்கமோ அவமானமோ இன்றிப் பரதேசியின் முன் தட்டையான அப்பாறையின் மீது பரப்பி வைப்பான் மாஸ்ட்டர். பரதேசி கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பான். அவனுக்குள்ளும் ஒரு விம்மல் எழுந்து தணிவது போல் தோன்றும். பிறகு தொண்டையைச் செருமிக்கொண்டு திடமான குரலில் பேசத் தொடங்குவான். பிறப்பின் அபத்தம் பற்றியும் இருத்தலின் அவஸ்த் தைகள் பற்றியும் வாழ்வின் அர்த்தம் குறித்தும் அவன் பேசிக்கொண்டு போவதில் ஒரு சொல்லும் மாஸ்ட்டருக்குப் புரியாது. அவனை ஒரு ஞானியெனக் கற்பனை செய்துகொண்டு போதை தலைக்கேறிச் சரியும்வரை 
கைகட்டி அவன் முன்னால் பவ்யமாக உட்கார்ந்திருப்பான்.

பிறகு அதை நினைத்து வெட்கமடைவான். தன் அந்தரங்கங்களைக் கொட்டிவிட்டதைக் குறித்தும் பரதேசியை ஞானியெனக் கற்பனை செய்து கொண்டதைக் குறித்தும் உருவாகும் வெட்கம்.

நான்கு

பரதேசிக்கு மூச்சிரைத்தது. வியர்த்துக் கொட்டியது. மீதமிருந்த ஐநூற்று நாற்பது படிக்கட்டுகளையும் ஒரே வீச்சில் கடக்க முயன்றிருந்தான். கால்கள் அடிக்கடி பின்னிக்கொண்டன. ஒரு சமயம் கண்கள் இருளத் தென்பட்ட உபய மண்டபமொன்றின் சுவரில் சாய்ந்துகொண்டான்கண்டது வெறும் தோற்றமோ? குருதியில் கலந்துவிட்ட கஞ்சாவின் போதை தந்த மயக்கமோ? மனப்பிறழ்வின் விளைவோ? யோசித்தபடியே அடிவாரத்தை  எட்டியபோது கொஞ்சம் திடப்பட்டிருந்தான். பதற்றத்தைதத் தணித்துக்கொள்ள ஏதாவது இருக்கிறதா எனத் தன் அழுக்கேறிய காவிப் பைக்குள் கையை விட்டுத் துளாவினான். அதில் ஒன்றுமே இல்லை. சிகரெட் வாங்குவதற்காகவே மாஸ்ட்டரின் டீக்கடைக்கு வந்தது. டீக்கடைப் பெஞ்சில் இரண்டு பேர் உட்கார்ந் திருந்தனர். எதிரே ஒருவன் நின்றுகொண்டிருந்தான். நின்றுகொண்டிருந்தவன் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். மாஸ்ட்டர் டீ ஆற்றிக்கொண்டிருந்தான். அவன் மனைவி துருவேறிய நாற்காலியொன்றில் கால்களை மடக்கி உட்கார்ந்துகொண்டிருந்தாள். எல்லோருமே சாதாரணமாகத் தென்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் யாரையாவது பார்த்தவுடன் புன்னகைக்க முடிந்திருந்தது. உலகின் மகத்தான மனிதர்களில் ஒருவர் உயிர்தெழுந்து வந்து அம்மலைப்பாதையின் உபய மண்டபமொன்றில் அரிதுயில் கொண்டிருப்பது  பற்றிய தகவல் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பரதேசி தன் கண்களைச் சந்திக்க முயன்று கொண்டிருந்ததை மாஸ்ட்டர் கவனித்தான். பனித்திருந்த சாம்பல் நிறக் கண்களில் எதையோ கேட்கவோ சொல்லவோ முற்படும் தவிப்பு.

தீப்பெட்டி வேணுமா பெருசு?”

பரதேசி பதில் சொல்லவில்லை. மாஸ்ட்டர் கொதித்துக்கொண்டிருந்த பால் பாத்திரத்திற்குள் அலுமினியக் கரண்டி ஒன்றை விட்டு மூர்க்கமாகத் துளாவினான். தம்ளர்களை அலசினான். வேறு என்ன செய்வதெனத் தெரியாததால் சும்மா இருக்க முடிவு செய்தான்.

டீ சாப்பிடறியா பெருசு?”

பரதேசி அதற்குப் பதிலளிக்கவிலலை. பார்வை இன்னும் துளைத்துக்கொண்டிருந்தது.

என்ன பெருசு? ஒரு மாதிரி முளிக்கறே? நல்லா இல்லையோ?”

ஆழ்ந்த பெருமூச்சொன்றின் பிறகு பரதேசி வெள்ளியங்கிரிப் புதூர் சுப்பிரமணியக் கவுண்டரின் உபய மண்டபத்தில் தான் கண்டதைப் பற்றித் மிகத் தணிந்த குரலில் சொல்லத் தொடங்கினான். மாஸ்டரிடம் எந்த அதிர்ச்சியும் தென்படவில்லை. அவன் எதையும் கேட்கவிலலை. ஈர்க்குச்சி ஒன்றை உருவிப் பல்லிடுக்குகளைக் குத்திக்கொண்டிருந்தான். ஆனால் சடலம், காமராஜர் போன்ற சொற்களைக் கேட்டபோது பரதேசி முக்கியமான வேறு ஏதோ ஒன்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறான் எனத் தோன்றியது.

இப்ப என்ன பெருசு, இருந்திருந்தாப்பல உனக்குக் காமராஜர் நெனப்பு?”

பரதேசி சளைக்காமல் எல்லாவற்றையும் மற்றொரு முறை சொல்லத் தொடங்கினான். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மாஸ்ட்டர் கடைசியில் ஆத்திரமடைந்து அவனை முட்டாள் என்றான். அதனுடன் கூடவே மோசமான கெட்ட வார்த்தைகளடங்கிய சில வசைச் சொற்களையும் எறிந்தான். பரதேசி அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தான் சொன்னவை உண்மையெனத் திடமான குரலில் மீண்டும் அழுத்திச் சொன்னான். வேறெதுவும் கேட்காமல் சற்றுநேரம் மௌனமாக இருந்தான் மாஸ்ட்டர்அங்கிருந்தே பார்க்க முடியும் என நம்பியவனைப் போல அண்ணார்ந்து மலையைப் பார்த்தான். எழுந்து பொடக்காணிவரை நடந்துவிட்டுத் திரும்பினான். பிறகுபோய்ப் பாத்தாத்தேங் கெடக்குதுஎனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல முனகியவன், “சித்த நேரத்திக்குக் கடயப் பாத்துக்க மதிஎன மனைவியை அழைத்துச் சொல்லிவிட்டு பரதேசியுடன் புறப்பட்டான். டீக்குடித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் ஆர்வம் மேலிட்டவனாகத் தானும் அவர்களுடன் நடந்தான். அடிவாரப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் ஒருவனும் அவனிடம் பேச்சுக்கு உட்கார்ந்திருந்த வனக் காவலர் ஒருவரும் தேவஸ்த்தான ஊழியரும் போகும் வழியில் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். “உம்பேச்சக் கேட்டு இத்தன பேரு பொளப்பக் கெடுத்துக்குட்டுக் கூட வாறொ. நீ சொன்னாப்பல மண்டபத்துல ஒண்ணுமில்லாமப் போச்சுன்னு வெச்சுக்கொ பெருசு, படிக்கட்டுல உருட்டித் தள்ளிப்புடுவெஎனப் பரதேசியை எச்சரித்தபடியே மற்ற ஐந்து பேரையும் முந்திக்கொண்டு நடந்த மாஸ்ட்டர் மண்டபத்தை அடைந்தபோது பின்வாங்கி அங்கிருந்த குழாயில் கை, கால், முகங்களைச் சுத்தமாகக் கழுவிக்கொண்டு கடைசி ஆளாக மண்டபத்திற்குள் நுழைந்தான். அப்போது அவனுக்குக் கண்கள் கலங்கத் தொடங்கியிருந்தன. தன்னையறியாமல் மேனியில் ஒரு சிலிர்ப்பு.

ஐந்து

அவள் எவ்வித ஆடையுமற்றவளாக தன் நிர்வாணத்தைப் போர்த்துக்கொண்டு சுருண்டு கிடந்தாள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தபோது துருவேறிய கதவிலிருந்து எழுந்த கிரீச்சிடல் முன்பு போல அவளைத் திடுக்கிடச் செய்யவில்லை. திடுக்கிடு வதற்கு இனி ஒன்றுமில்லை. முழு உடலும் மீதம் வைக்காமல் ஏற்கனவே குதறப்பட்டுவிட்டது. பெண்மையின் இயல்பான குணமான வெட்கம்கூடக் கொன்றொழிக்கப்பட்டு விட்டது. அவ்வளவுக்குப் பிறகும் குறைந்தபட்சம் முனைகள் உடைந்த தன் முலைகளையாவது மறைத்துக்கொள்ள அவள் விரும்பியிருப்பாள்தான். ஆனால் ஒரு கந்தல்கூட அருகில் இல்லைமூன்று நாள்களாக அடைபட்டுக் கிடக்கும் அச்சிறு அறைக்குள் வெளிச்சம் நுழையும் ஒவ்வொரு சிறு தருணத்திலும் ஏதாவதொரு துண்டுத் துணி அல்லது காகிதக் கிழிசல் தென்படுமா என அவள் தன் உயிரற்ற பார்வையால் தேடிப் பார்த்திருந் தாள். காணக் கிடைப்பவை காலியான மதுப் பாட்டில்களும் கரிந்த சிகரெட் துண்டுகளும் பயன்படுத்தி வீசப்பட்ட ஆணுறைகளும்  அவளைச் சித்தரவதைக்குள்ளாக்கும் கருவிகளும் இன்னும் ஏராளமான குப்பைகளும் தாம்.   தரையிலும் சுவர்களிலும் உலர்ந்து உறைந்த ரத்தத் துளிகள். அவளு டையதும் அவளுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டுக் கிழித்துப் போடப்பட்ட மற்றவர்களுடையதும். இன்ஸ்பெக்டரோ கான்ஸ்டபிள்களோ ரைட்டரோ இப்போது அங்கு வரும்போது அவர்களது கண்கள் அவளைப் பொசுக்கும் காமத்தின் கொடிய நெருப்பாகப் பற்றியெரிவதில்லை. கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவனும் அவளுடைய முலைகளைக் கசக்கி வலியை ஏற்படுத்திவிட்டுப் போவதில்லை. ஒருவன் அவள் மேல் கவிந் திருக்கும்போது மற்றவன் குறியைக் கையில் பிடித்துக்கொண்டு தன் முறைக்காகக் காத்திருப்பதில்லை. அவளுடைய யோனி இப்போது உருக்குலைந்துவிட்டது. பயனற்றதாகிவிட்டது. உருக்குலைவின் கெட்ட நீர் அதிலிருந்து வழிந்துகொண்டிருக்கிறது. துர்நாற்றத்தைத் தாளமுடியாமல் இன்ஸ்பெக்டர் கைக்குட்டையால் நாசியைப் பொத்திக்கொள்கிறான். கான்ஸ்டபிள்களில் ஒருவன் உலகின் மிக நீண்ட குறியைப் போன்ற லத்தி ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். “அதச் சொருகுஎனக் கட்டளையிடுகிறான் இன்ஸ்பெக்டர். அவளுடைய தந்தையின் வயதொத்த  அந்தக் கான்ஸ்டபிள் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரு பொறியாளனின் லாவகத்தோடு அவளுடைய யோனிக்குள் லத்தியைச் செருகுகிறான். எஞ்சியிருக்கும் உயிரின் சக்தியைக் கொண்டு அவள் தன்னால் முடிந்தவரை ஓலமிடுகிறாள். யாரையாவது உதவிக்கு அழைக்க விரும்புகிறாள். சில முகங்கள் நினைவுக்கு வருகின்றன. மூன்றாண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த அவளுடைய தந்தைஞாபகங்களின் தொலைவிலிருக்கும் தாய், அவளை வீட்டை விட்டுத் துரத்திய சகோதரன், கைவிட்டுவிட்டுப் போன காதலன், அடைக்கலம் கொடுத்த தோழர்கள் என நினைவின் தூர்ந்த கிணற்றுக்குள் மூழ்கியிருக்கும் சில முகங்கள்.  “சொல்லு, எங்க கொண்டு போயி வெச்சுருக்கறே? சொல்லு. சொல்லுடி தேவுடியாஅவள் ஏதாவது சொல்ல நினைக்கிறாள். பாம்பினுடையதைப் போல இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட்ட நாக்கு சுழல மறுக்கிறதுபேச முற்படும்போது அவ்விரண்டில் ஏதாவதொன்று உடைந்து நொறுங்கிவட்ட பற்களுக்கிடையே சிக்கிக்கொள்கிறது. “சொல்லுடி தேவுடியா. இல்லாட்டிக் கொண்ணு போட்டுருவேன். நா யாருன்னு உனக்குத் தெரியுமாடீ? தெரியுமாடீ திருட்டுத் தேவுடியா முண்டெஅவள்கடவுளேஎன முனகுவதற்கு கிறாள். தன் நகரத்தின் பெருமிதமாக உயர்ந்து நிற்கும் மலை உச்சியில் தன் காதலிகளோடு வீற்றிருக்கும் அவளுக்குப் பிரியமான முருகக் கடவுளின் கருணை மிகுந்த முகத்தில் மிதக்கும் குளிர்ந்த கண்களை நினைத்துக்கொள்கிறாள். அப்போதுதான் அவன் தன் ப்ரௌன் நிற ஷூ அணிந்த கால்களிலொன்றை உயர்த்தி அவளது வயிற்றின் மீது வைக்கிறான், “சொல்ல மாட்டே, சொல்ல மாட்டே, என்ன கொழுப்புடீ உனக்கு?” மனப்பிறழ்வுக்குள்ளாவதிலிருந்து தப்புவதற்காக அவள் தன் ஞாபகக் குளத்தில் மூழ்குகிறாள்அதன் கலங்கிய ஆழங்களில் புத்தன், இயேசு, காந்தி எனச் சில பெயர்கள் எந்தக் கவலையுமற்றவையாய்த் திரிந்துகொண்டிருப்பது அவளுக்குச் சோர்வூட்டுகிறதுஇந்தப் பெயர்கள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவர்களில் யாரையும் அவள் பார்த்ததில்லை. இருபத்தியேழே வயதான ஒரு பள்ளிக்கூட ஆசிரியைக்கு அதற்கான வாய்ப்புக்களும் இல்லை. அவர்களது புகைப்படங்களைப் பார்த்திருக்கிறாள். அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறாள். தன் மாணவர்களுக்கு அவர்களது வாழ்வின் உன்னதங்களைக் கற்பித்திருக் கிறாள். அந்தப் பெயர்களில் இரண்டு அவதார புருஷர்களுடையவை. ஒருவர் அவளுடைய துன்பத்தைக் காணச் சகியாமல் தன் அரண்மனையை விட்டு வெளியேறியவர். மற்றொருவர் அவளுக்காகச் சிலுவை சுமந்தார். மூன்றாம வர் அவளது சுதந்திரத்தை நிலைநாட்டியவர்.   இப்போது எல்லோருமே முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டார்கள். அவளிடமிருந்து விலகித் தொலைதூரங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அவள் அவர்களில் யாரையாவது உதவிக்கு அழைக்க நினைத்தாள். ஒரு சிறு உதவி போதும். அவளுடைய நிர்வாணத்தின் சிறு பகுதியையேனும் மறைத்துக்கொள்வதற்கான ஒரு கந்தலைத் தந்தால்கூட இருபத்தியேழே வயதான அந்த இளம் பள்ளிக்கூட ஆசிரியையால் அவர்களிடம் விசுவாசமாக இருக்க முடியும்ஆனால் அவர்களில் யாருமே தங்களுடன் எதையும் கொண்டு சென்றவர்களில்லை. தம் சொந்த நிர்வாணத்தை மறைத்துக்கொள்வதற்கே எதையும் வைத்துக் கொண்டிருக்க விரும்பியிருக்காதவர்களுக்குக் கொண்டு செல்ல என்ன இருந்திருக்க முடியும் என நினைத்தாள் அவள். தன் இருபத்தியேழு வருடங்களில் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் எந்தக் கடவுளையும் தான் விசுவாசித்தவளல்ல என்பதும் அவளது நினைவுக்கு வந்தது? முருகக் கடவுளைக்கூடக் கடவுளாக அல்ல, குழந்தையின் பேதமை தவழும் பேரழகுக்காகவே விரும்பியது. இப்போது திடீரென ஏற்பட்டுவிட்ட கையறு நிலையில் அழைத்தால் மட்டும் வந்து நிற்க கடவுளர்களுக்கு என்ன கட்டாயம்? வீட்டில்கூட எந்தக் கடவுளின் உருவமும் இருந்து அவள் பார்த்த தில்லை. அவளுடைய தந்தை நம்பிக்கை வைத்திருந்த ஒரே கடவுள் சட்டமிடப்பட்ட கருப்பு வெள்ளைப் புகைப்படமாக அன்றுவரையிலும்கூட வீட்டுச் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் காமராஜர் மட்டுமேதான். கல்விக் கண் கொடுத்த கடவுள் என அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் அவளுடைய தந்தை. கருப்பு வெள்ளைக் கடவுள். மிகச் சிறு வயதிலேயே அவரைப்பற்றி அவள் மனதில் படிந்துவிட்ட சித்திரம் அது. “எனக்கு மட்டும் அல்ல, உனக்கும் உன்னைப் போல மற்ற எல்லோருக்கும் கல்விக் கண் தந்த கடவுள் அவர்என அப்புகைப்படத்தைக் காட்டிப் படிய வைக்கப்பட்ட சித்திரம். தந்தையின் நினைவாகவே அவள் அந்தப் புகைப்படத்தைப் பாதுகாத்து வைத்திருந்தாள். அந்தக் கருப்பு வெள்ளைக் கடவுள் கொடுத்திருந்த கண்களைத்தான் இப்போது அவளால் திறக்க முடியவில்லை. இருள் ஒரு அடர்ந்த புகைப்படலமாக அவளுடைய பிரக்ஞையின் மீது கவிகிறதுயாரோ அவளுடைய நகக் கண்களில் ஊசியேற்றுகிறார்கள். யாரோ ஏற்கனவே கத்தரித்துச் சின்னாபின்னமாக்கப்பட்ட அவளுடைய கூந்தலின் எஞ்சிய கற்றைகளை வேரோடு பறித்தெடுக்க முயல்கிறார்கள். அவளுடைய தந்தையின் வயதையொத்த அந்தக் கான்ஸ்டபிள்தான்அவருக்கு முடியவில்லை. வியர்வையாலும் அழுக்காலும் எச்சிலாலும் ரத்தத்தாலும் பிசுபிசுத்துக் கிடக்கும் கூதரையான முடிக்கற்றைகள் வயதான அந்தக் கைகளுக்குச் சிக்காமல் வழுக்குகின்றன. அவருக்கு மூச்சிரைக்கிறது. கண்கள் பிதுங்குகின்றன. நாக்கு உலர்கிறது. அவளுக்கு அந்த வயதான கான்ஸ்டபிள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது. செருகிக்கொண்டிருக்கும் தன் கண்களில் மீதமிருக்கும் அன்பின் கடைசித் துளிகளை அவருக்குப் பருகத் தர முடியுமா என அவள் யோசிக்கிறாள். “என்னய்யா, முடீலயா? நாடி தளந்து போச்சா?” எனக் கேட்டு அவளது யோனியின் ரத்தக்கறை படிந்த லத்தியால் வயதான கான்ஸ்டபிளின் மண்டையில் ஒரு தட்டுத் தட்டுகிறான் அந்த இன்ஸ்பெக்டர். கான்ஸ்டபிள், “ஐயோஎன அலறுகிறார். மண்டையைத் தேய்த்துவிட்டுக் கொள்வதற்காக அவளது கூந்தலிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட முடியின் ஒரு கற்றையை உதறிவிட்டு கைகளை உயர்த்துகிறார். இன்ஸ்பெக்டர் விளையாட்டுக்காட்டுவது போல இன்னொரு முறையும் தட்டுகிறான். அது அவளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. அவள் சிரிக்க முற்படுகிறாள். அதற்கான அற்ப வலிமையுங்கூட அவளிடம் எஞ்சியிருக்கவில்லையாதலால் அது அவளது வீங்கிய உதடுகளின் மீது ஒரு பலவீனமான புன்னகையாக மலர்கிறது.

இன்ஸ்பெக்டர் குழப்பத்துடன் புருவத்தை உயர்த்துகிறான். ஏமாற்றத்துடன் பெருமூச்சு விடுகிறான்.

ஒரு சைகையின் மூலம் எல்லாவற்றையும் கைவிடச் சொல்லி அங்கிருந்த எல்லோருக்கும் உத்தரவிடுகிறான்.

ஜிப்பைக் கழற்றித் தளர்ந்துபோன தன் குறியை வெளியே எடுத்து நிரந்தமாக உறைந்துவிட்ட அந்தப் புன்னகையின் மீது மூத்திரத்தைப் பீய்ச்சியடிக்கிறான்பிறகு நிதானமாக நடந்து அந்த நரகத்தை விட்டு வெளியேறுகிறான்.

ஆறு

ஓய்வேயில்லாமல் குடித்துக்கொண்டிருந்தான் இன்ஸ்பெக்டர். பறவைகளும் அணில்களும் களும் தும்பைச் செடிகளும் இன்னும்கூட எஞ்சியிருக்கும் புறநகரின் ஒரு பகுதியில் இருந்த தன் வீட்டின் இரண்டாம் தளத்திலிருந்த அவனுடைய தனிப்பட்ட அறையின் கதவு உள்புறமாகத் தாளிடப் பட்டிருக்கிறது. கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

கதவைத் தட்டவோ அழைப்பு மணியை அழுத்தவோ யாராவது முயன்றால் அதற்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. பள்ளி ஆசிரியையான அவனது மனைவியோ கல்லூரி மாணவியான மகளோதான் அதற்கு முயல்பவர்கள். வேறு யாருக்கும் அதற்கான துணிச்சலைத் தர அவன் விரும்புவதில்லை. இதுபோன்ற தருணங்களில் உயரதிகாரிகளுங்கூட அவனைத் தொந்தரவு செய்வதில்லை. அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இப்போது அவனுக்கு ஓய்வு தேவைப்படும். ஒவ்வொரு வெற்றிகரமான நடவடிக்கைக்குப் பின்னும் மனம் கல் போல் இறுகி விடுகிறது. தளர்த்திக்கொண்டு அன்றாடங்களுக்குத் திரும்ப ஏதாவது செய்தாக வேண்டும். நாள் முழுவதும் குடிப்பது, யாரையாவது புணர்ந்துகொண்டிருப்பது, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கோயில் களுக்கோ சுற்றுலாத் தளங்களுக்கோ செல்வது. எது என்பது அவனது தேர்வு. தேவையான ஏற்பாடுகள் துறையின் மூலம் செய்து தரப்பட்டுவிடும். நாட்டின் புகழ் பெற்ற என்கௌன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அவனுக்கு இதுபோன்ற சலுகைகளை அளிப்பது நிர்வாகத்தின் கடமை. அவன் இரையை ஒருபோதும் தப்பவிடாத புலி. வேட்டை அவனது ரத்தத்தில் ஊறியதல்லவென்றாலும் அதைத் திறம்படக் கற்றுக்கொண்டிருப்பவன். குற்றவாளிகளிடமிருந்து ரகசியங்களை வாங்குதில் எந்த எல்லையையும் கடக்கத் தயங்காதவன். துறையில் அவனைப் போலச் சித்ரவதையின் நுட்பங்களைப் பயின்று வைத்திருப்பவர்கள் அதிகம் பேர் இல்லை. அது ஒரு கலை என அவனே சொல்வான். அப்படியானால் அதில் செய்நேர்த்தியின் உச்சத்தை அடைந்திருப் பவனும் அவனே என்று துறை அவனைப் புகழ்கிறது. ஒருபோதும் அவன் அவற்றைப் பற்றி வாய் திறப்பதில்லை. ஒன்று முற்றுப்பெற்றதோடு அதைப் பற்றிய நினைவுகளும் அழிக்கப்பட்டுவிட வேண்டும் என்பது அவனுடைய கொள்கை. காவல் நிலைய மரணங்கள், போலி என்கௌன்டர்கள் மற்றும் வன் புணர்ச்சிகளுக்காகவும் கூட்டு வன்புணர்ச்சிகளுக்காகவும் குற்றம் சுமத்தப் பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்படும்போதும்  வாய் திறப்பதில்லை. கேட்கப்படும் கேள்வி எதுவாக இருந்தாலும் இல்லை என்றோ தெரியாது என்றோதான் பதில் சொல்கிறான். சாட்சியங்களையும் தடயங்களையும் அழிப்பதில் அவன் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. அவை சில சமயங்களில் அவனுக்கெதிராகச் செயல்பட்டுவிடுகின்றன. நீதிமன்றம் தன் சட்டப் பிரிவுகளிலிருந்து   ஏதாவதொன்றை மேற்கோள் காட்டி அவனைத் தண்டித்துவிடுகிறது. அதனால் அவனைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வை நிறுத்திவைக்க வேண்டியிருக்கிறது. மாவட்டக் காவல் அதிகாரியின் தனது முந்தைய நிலையிலிருந்து அம்மலை நகரத்தின் பாழடைந்த கட்டடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்டேஷனில் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டராகப் பணிபுரிய நேர்ந்திருப்பது அதனால்தான். இவ்வளவையும் கடந்துதான் பாழடைந்த அந்தக் கட்டடத்திலிருந்து முந்தைய நாள் அதிகாலையில் கொண்டு செல்லப்பட்ட இருபத்தியேழே வயதான ஒரு பெண்ணின் குதறப்பட்ட உடல் அவனுக்கு அவ்வளவு பெரிய நெருக்கடியை ஏற்படுத் தியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா உண்மைகளும் வெளிக்கொணரப்பட்டு விட்டன. சித்ரவதைக்கூடத்தின் ஏதோ ஒரு சுவர், ஒரு கருப்பு ஆடு அவனைக் கண்காணித்திருக்கிறது. நகரில் பதற்றம் கூடிக்கொண்டிருக்கிறது. ஆசிரியர், மாணவர் அமைப்புக்களும் பெண்கள் அமைப்புக்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நாளிதழ்க ளிலும் காட்டப்படும் சித்ரவதையின் ஒரு காட்சித் துண்டு மனித உரிமை அமைப்புக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

அவனுடைய உயரதிகாரிகள் எல்லாவற்றுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவளை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரிப்பதில் துறை கிட்டத்தட்ட வெற்றி பெற்றிருக்கிறது. அவளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஒரு துப்பாக்கியும் சில துண்டறிக்கைகளும் ஊடகங்களுக்குக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. இல்லாவிட்டால் நிலமை கைமீறிப் போயிருந் திருக்கும். இது தன் வீட்டுக்குள்ளேயே புயலை மூளச் செய்யும் என்பதை இன்ஸ்பெகடர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. கல்லூரி மாணவியான அவனுடைய மகள் ஓரு கெட்ட ஆவியைப் போல அவ்வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறாள்வரவேற்பறையிலும் கூடத்திலும் நடைவழிகளிலும் படிக்கட்டுக்களிலும் படுக்கையறைகளிலும் போர்டிகோவிலும் தோட்டத் திலும் மற்ற எல்லா இடங்களிலும் வன்மத்துடன் பதியும் அவளது காலடிகளால் வீடு அதிர்கிறது. பத்தொன்பது வயதேயான அவனுடைய செல்ல மகள் மனப்பிறழ்வுக்குள்ளானவளைப் போலக் கூச்சலிட்டுக் கொண்டிருக் கிறாள். கால்கள் தடதடக்க அவள் மாடிப்படியேறி வரும்போது அவன் பதற்றமடைகிறான். உள்புறமாக இறுகத் தாழிடப்பட்டிருக்கும் கதவு அவள் சோர்வுற்றுத் திரும்பிச் செல்லும்வரை நடுங்கிக்கொண்டிருப்பதையும் அவனது கோப்பையில் நிரம்பியிருக்கும் விஸ்கி தன் வெதுவெதுப்பை இழப்பதையும் இன்ஸ்பெக்டர்  தன் வெற்றுக் கண்களால் பார்த்துக்
கொண்டிருக்கிறான். அவளுடைய மிருதுவான கரங்களால் எப்படி அவ்வளவு மூர்க்கமாகக் கதவைத் தட்ட முடிகிறது என ஆச்சரியப்படுகிறான். தன் சொந்தத் தகப்பனின் மீது வசைமாரிப் பொழிவதற்குரிய  அவ்வளவு கொடிய, ஆபாசமான சொற்கள் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கக்கூடுமென யோசித்துப் பார்க்க முயல்கிறான்.

கூடவே கடந்த பல ஆணடுகளாகப் பிரயோகித்துக்கொண்டிருக்கும் வசைச்சொற்களைத் தான் எங்கிருந்து கற்றுக்கொண்டோம் என்பதைப் பற்றியும் யோசிக்க முயன்றான் இன்ஸ்பெக்டர். ஆனால் அவன் சோர்வுற்றிருக்கிறான். எதையும் ஆழமாக யோசிக்க முடியவில்லை. மூளை மழுங்கிக் கிடக்கிறது. இது இயற்கையானதுதான். கடந்த முப்பத்தாறு மணி நேரமாகத் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்ததாலும் இருக்கலாம். தோல்வி சகிக்க முடியாததாக இருக்கும்போதுதான் இன்ஸ்பெக்டர் இவ்வளவு மோசமாகக் குடிக்கிறான். தோற்கடிக்கப்படும்போதும் அவமானத்துக் குள்ளாக்கப்படும்போதும். இருபத்தேழு வயதேயான அந்தப் பள்ளி  ஆசிரியை தனது பலவீனமான புன்னகை ஒன்றின் மூலம் அவனைத் தோற்கடித்து விட்டாள். மோசமாக அவமதித்துவிட்டாள். அவன் மூத்திரத்தைப் பீய்ச்சி யடித்துக்கொண்டிருந்த போதுதான் அவளது முகத்தில் புன்னகை தோன்றியது. பிறகு உறைந்துவிட்டது. மரணம் புன்னகையைத் தோற்றுவிக்கிற விஷயமா என்ன? அவனுக்கு அப்படித் தோன்றவில்லை. கொடிய குற்றவாளிகளில் பலர் அவனது கண்களைக் கண்டே ஓடுங்கிவிடுவதை அவன் அறிவான். ஒருமுறை அவனது கைதியாக இருந்துவிட்டுப் போன பிறகு எஞ்சியிருக்கும் வாழ்வில் என்றுமே புன்னகைக்க முடிந்திராதவர்கள் பற்றிய கதைகள்கூட உண்டு. ஆனால் மரணத்தைப் புன்னகையோடு எதிர்கொண்ட சிலரைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். காந்தியோ காமராஜரோ வேறு யாரோ. அவனுக்குச் சரியாக நினைவில்லை. அதுபோன்ற தகவல்களை யாரிடமிருந்தாவது கேள்விப்படும்போதெல்லாம் இன்ஸ்பெக்டர் வெறுமனே தோள்களைக் குலுக்கிக்கொள்வான். அது கட்டுக்கதையாக இருக்கும் எனத் தோன்றும். அவர்கள் மாமனிதர்கள் எனச் சொல்லப்படுகிறார்கள். மரணத்துக்குப் பிறகு அவர்களைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்ல வேண்டுமே என்னும் கவலையால் உருவாக்கப்பட்ட புனைவாக அவை இருக்கலாம். ஆனால் உயிர் துவண்டு விழுந்தபோது அவளுடைய உதடுகளில் புன்னகை உறைந்திருந்ததே?

அப்பா, கதவத் தெறங்க அப்பா. எனக்கு உங்ககிட்டப் பேசணும். கதவத் தெறங்க?”

கதவத் தெறங்க அப்பா

கதவத் தெறங்க அப்பா, தெறக்க மாட்டீங்களா

என்ன பேசுவாள் அந்தச் சிறுமி?

தனக்குத்தான் அவளிடம் பேச இருக்கிறது என நினைத்துக்கொண்டான் இன்ஸ்பெக்டர்.

அவளிடம் சொல்லலாம். அது தன் கடமை என்று. கடமை மட்டுமேயல்ல, வாழ்க்கை. பத்தொனபதே வயதான நிரம்பிய பேதமையிலிருந்து இன்னும் விடுபட்டிருக்காத அச்சிறு பெண்ணுக்கு அது புரிவதில்லை. புரிந்துகொள்ளும் போது தான் பிரயோகித்த ஆபாசமான வசைச்சொற்களுக்காகத் தகப்பனிடம் அவள்தான் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிருக்கும். இன்ஸ்பெக்டர் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை எனத் தீர்மானித்தான். ஒருவேளை பாழடைந்த அந்தக் கட்டடத்துக்குள் நடைபெற்றிருந்த எல்லாமே படம் பிடிக்கப்பட்டிருந்தால்? ஏதாவதொரு தொலைக்காட்சி அலைவரிசை  அதைத் தனது அண்மைச் செய்திப் பக்கத்தில் வெளியிட்டிருந்தால்? அப்படியானால் தகப்பன் தனது புனிதமான சீருடையைக் களைந்துவிட்டு விரைத்த குறியுடன் ஓர் இருபத்தியேழு வயதுப் பெண்ணின் பிய்த்தெடுக்கப்பட்ட நிர்வாணத்தின் மீது மூர்க்கமாகக் கவிவதைக் காண வேண்டிய துரதிருஷ்டம் பேதமை யிலிருந்து இன்னும் விடுபட்டிருக்காத அவன் மகளைச் சூழ்வதைத் தடுக்க முடியாமல் போகலாம்.

இன்ஸ்பெக்டர் மேலும் ஒரு குவளை விஸ்கியை ஊற்றிக்கொண்டான்.
எல்லாமே பொய்யாக்கப்படும்வரை அல்லது தன் செல்ல மகளின் மூர்க்கம் தணியும்வரை, அல்லது அது தகப்பனின் தவிர்க்க முடியாத உத்தியோகக் கடமை என அவள் நம்பத் தொடங்கும்வரை இரண்டாம் தளத்திலுள்ள எவ்விதத் தொடர்புகளுமற்ற அந்த அறைக்குள்ளேயே அவன் முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும். அதுவரைக்குமான மது பாட்டில்கள் கையிருப்பில் இருக்கின்றன. அவள் இல்லாத தருணத்தை அறிந்துகொண்டு சாப்பாட்டுத் தட்டுக்களுடன் ரகசியமாகத் தன்னிடம் வந்து சேரத் தெரிந்த ஆர்டர்லி இருக்கிறான்.

ஆர்டர்லி பிற்பகலில் வந்து சேர்ந்தான். அவனை உள்ளே அனுமதித்துக் கதவைத் தாளிட்டுக்கொள்ள முயன்றபோது ஆர்டர்லி அது தேவையில்லை யென்றான். போராட்டம் இப்போது தணிந்துவிட்டது. அந்த இருபத்தியேழு வயதுப் பள்ளிக்கூட ஆசிரியை  ஒரு பயங்கரவாதி எனவும் சட்டவிரோதமாக அவள் கொல்லப்படவில்லையெனவும்  தலைமை சொன்னதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். தொலைக்காட்சிகளில் இப்போது ஓடிக்கொண்டிருப்பது முன்பு வெளியிடப்பட்ட அந்தக் காட்சித் துண்டு போலியானது என்பதைச் சொல்லும் தயடவியலாளரின் அறிக்கை. இன்ஸ்பெக்டர் உடனடியாகத் தொலைக்காட்சியை இயக்க உத்தரவிட்டான்எல்லா அலைவரிசைகளிலும் அதுவேதான் செய்தி. எல்லோருமே அவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மூட்டை தூக்குபவர்கள், குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் திரைகளில் தோன்றி அவனுக்குப் புகழ் மாலை சூடிக்கொண்டிருந் தார்கள். பள்ளி ஆசிரியையின் போர்வைக்குள் ஒளிந்துகொண்டிருந்த மோசமான பயங்கரவாதி ஒருத்தியிடமிருந்து அவன் நாட்டைக் காப்பாற்றியிருக்கிறான். அவன் நம் காலத்தின் நாயகர்களில் ஒருவன். இளைய தலைமுறை அவனைப் பின்பற்ற வேண்டும். முப்பத்தாறு மணி நேரத்திற்குள் தான் ஒரு நாயகனாக்கப்பட்டிருந்ததைப் பார்த்த இன்ஸ்பெக்டர் புன்னகைத்துக்கொண்டான். தன் செல்ல மகளுக்கு இதைக் காட்ட வேண்டும்.

இப்போது என்ன?”

உஙகளிடம் அவசரமாகப் பேச வேண்டுமென்று சொல்லச் சொன்னது 

தலைமையகம்

இன்ஸ்பெக்டர் தனது கைபேசியை இயக்கத்துக்குக் கொண்டு வந்தான்.
துறையின் பெருமையை நிலைநாட்டிய நாயகனுக்கு மறுமுனையில் காத்திருந்தது புதிய சவாலான ஒரு பணி.

அவன் உடனடியாகப் புறப்பட்டு மலைமேலுள்ள முருகன் கோயில் படிக்கட்டுகளுக்குச் செல்ல வேண்டும். ஐநாற்று நாற்பதாவது படிக்கட்டுக்கும் நாற்பத்தொன்றாவது படிக்கட்டுக்குமிடையே உள்ள உபய மண்டபத்தில் காமராஜரின் சடலம் கிடக்கிறது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். உடனடியாக என்றால் அது காமராஜருடைய சடலம் என்பது யாருக்கும் தெரிவதற்கு முன்பாக.

ஆர்டர்லியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தான். குளிப்பதற்கு முன்பாகச் சவரம் செய்துகொள்ளத் தவறவில்லை. கீழே தரைத்தளத்துக்கு வந்து சலவை செய்யப்பட்டுப் பத்திரப்படுத்தப்பட்டத் தனது புனித ஆடையை அணிந்துகொண்டான். குண்டுகள் நிரப்பப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை உறையில் செருகிக்கொண்டு மனைவியிடம் சொல்லிக்கொள்வதற்காகச் சமையலறைக்குள் நுழைந்தான்.  “சாப்பிடலயா?” என்பதைத் தவிர வேறு எதுவுமே கேட்காத மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது கதவருகே வழியை மறித்துக்கொண்டு பத்தொன்பதே வயதான தனது செல்ல மகள் நிற்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் பின்வாங்க நினைத்தான். ஆனால் அவள் அமைதியாகவே நின்றாள். நல்லதாகவோ கெட்டதாகவோ ஒன்றுமே சொல்லவில்லை. அசைவற்றிருந்த அவளுடைய கண்களில் ஈரத்தின் சுவடுகூட இல்லை. ஒருவேளை அவள் புரிந்துகொண்டிருக்கலாம்.

இன்ஸ்பெக்டர் அவளை நெருங்கினான். சாகசங்களுக்கான ஒவ்வொரு புறப்பாட்டின்போதும் செய்வதைப் போல அவளிடமிருந்து ஒரு முத்தத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆசையுடன் குனிந்து அவளுக்குத் தன் கன்னத்தைக் காட்டினான்.

அந்தச் சின்னஞ்சிறு பெண் முழு வலுவோடும் தன் தொண்டையிலிருந்து எச்சிலைக் காறி அவன் முகத்தில் துப்பினாள். எதையோ முனகினாள். பிறகு தடதடக்கும் ஓசையுடன் முதல் தளத்திலிருக்கும் தனது அறையை நோக்கி நடந்தாள். ஆர்டர்லியைத் தவிர வேறு யாரும் அதைப் பார்க்கவில்லை. இன்ஸ்பெக்டர் நிதானமாக நடந்து வந்து நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்றான். அவளுடைய பழியின் திரவம் வழியும் தன் முகத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். பிறகு கண்ணாடியுள் தெரிந்த தன் பிம்பத்திடமிருந்து ரகசியமான புன்னகை ஒன்றின் மூலம் விடைபெற்றுக்கொண்டான்.

ஏழு

வெள்ளியங்கிரிப் புதூர் சுப்பிரமணியக் கவுண்டரின் உபய மண்டபம் மௌனத்தின் மூர்க்கமான பிடிக்குள் சிக்கியிருந்தது. அதுபோன்ற சூழலொன் றில் எதிர்பார்க்கக்கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே அங்கு தென்பட்டனர். எல்லோரது பார்வையும் கச்சிதமாக ஒரு திசையை நோக்கிக் குவிந்திருந்தன. நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பவர்களைப் போன்ற ஒரேவிதமான பாவனை அங்கிருந்த எல்லோரிடமும் தென்பட்டது. உபய மண்டபமும் அதன் திண்ணையில் கிடந்த சடலமும் மரங்களின் அடர்ந்த கிளைகளினூடே ஊடுறுவியிருந்த பிற்பகல் வெயிலும் அசைவற்ற மரங்களும் மேலே ஆறுமுகக் கடவுளின் சன்னதியிலிருந்து சீரான கால இடைவெளிகளில் ஒலித்துக்கொண்டிருந்த மணிச்சத்தமும் நாடகத்துக் குரியவையாகவே தென்பட்டன.

எனவே ஒவ்வொருவரும் அதை நாடகமாகவே கற்பனை செய்துகொள்ளலாம்.
ரத்தமும் சதையுமாக விரிந்திருக்கும் எதார்த்தத்தை நாடகம் எனக் கற்பனை செய்துகொள்வது சங்கடமூட்டுவதாகத் தோன்றும் என்றாலும் அதில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. எதார்த்தத்தின் முடிவின்மையும் நிச்சயமின் மையும் உருவாக்கும் இருளுக்குள் திசைகளைப் பற்றிய குழப்பங்களால் சூழப்பட்டுத் திணறிக்கொண்டிருப்பதைவிடக் கற்பனையின் சவால்களைக் கடந்து செல்வது எளிதுயாரும் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. கண்ணீர் பெருக்க வேண்டியதில்லை. எதார்த்தத்தின் அதிகாரத்தைப் பின்தொடர்ந்து சென்று அது இழுக்கும் இழுப்புக்கெல்லாம் பணிய வேண்டிய கட்டாயம் நிச்சயமாக ஒரு நாடகத்தில் இல்லை. கற்பனையின் விரிவுக்கேற்றபடி நாம் விரும்பிய தருணத்தில் விரும்பிய விதத்தில் எந்த இடத்திலும் நிறுத்திக்கொள்ள முடியும்எதிர்பாரத முடிவுகளால் பார்வையாளர்களைத் திணறடிக்கக்கூடச் செய்யலாம். விளைவுகளில் ஒரு நாடகம் ஏற்படுத்தும் தாக்கம் வசீகரமானது. உதாரணமாக மண்டபத்தினுள் சடலமாகக் கிடக்கும் காமராஜர், காமராஜரோ சடலமோ அல்ல காமராஜராக வேடம் பூண்டிருக்கும் நடிகர் தன்னைச் சடலமாகப் பாவித்துக்கொண்டிருக்கிறார் எனக் கற்பனை செய்துகொண்டால்?

அவரது சடலத்தை முதன் முதலில் பார்த்த பரதேசி ஒரு பாத்திரமென்றால் அவன் இவ்வளவு குலைந்துபோக வேண்டியதில்லை. அவன் மீது இப்போது உருவாகும் பச்சாதாபம் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகன் மீது உருவாவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அவனது அந்தரங்கங்களை அறிந்துகொள்ளும் உரிமையை   எவருடைய அனுமதியும் இல்லாமல் கைப்பற்றிக்கொள்ள முடியும். அவனது துக்கத்திற்கான காரணங்களை காலத்திற் கும் அவனுக்கும் உள்ள இடைவெளிகளைப் பற்றிய உரையாடல் களிலிருந்து மீட்டெடுக்க ஒருவரால் முடியும். வசனங்கள் நேர்த்தியாக அமைந்திருக்க வேண்டியது மட்டும் முக்கிய நிபந்தனை.

பிறகு அந்த இன்ஸ்பெக்டர்.

அவனுடையது முக்கியமான பாத்திரம். நாடகத்தின் நாயகனாகக்கூட அவனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போதைய சூழலைக் கொண்டு பார்த்தால் மேடையில் அவனுக்கு அதிக வேலையிருக்கும் எனத் தோன்ற வில்லை. யாராலும் நேரடியாக உரிமை கொண்டாட முடியாத ஒரு சடலத்தை அப்புறப்படுத்தும் ஒரு எளிய காரியத்தில் எவ்விதமான சாகசங்களுக்கும் வாய்ப்பில்லை. இன்ஸ்பெக்டர் எந்தப் பதற்றமும் அற்றவனாகத் தென்பட்டான். சடலம் வரலாற்று நாயகரான மாமனிதர் ஒருவருடையது என்பதோ அவர் ஏற்கனவே ஒருமுறை இறந்துபோய்விட்டவர் என்பதோ அவனுக்கு எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. அவன் வந்து பார்த்தபோது காமராஜரின் சடலம் பரதேசி முதன்முதலாகப் பார்த்தபோது எப்படி இருந்ததோ அப்படியேதான் இருந்தது. பரதேசி, மற்றொரு பரதேசி, மாஸ்ட்டர், அவனது ஒரு வாடிக்கையாளன், வனக்காப்பாளர்கள் இருவர், சாலையைப் பயன்படுத்தாமல் படிக்கட்டுக்களின் வழியே இறங்கி வந்துகொண்டிருந்த சர்க்கரை வியாதியால் பீடிக்கப்பட்ட ஒரு தம்பதி என வெகு சிலர் மட்டுமே அங்கு இருந்தனர். எல்லோருமே குறைந்தபட்சம் இருபதடிகள் தள்ளி நின்று சடலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் படிக்கட்டுக்களைப் பயன்படுத்தவில்லை. தனது ஜீப்பை மலைக்கோயிலுக்குச் செல்லும் தார்ச்சாலையின் ஒன்பதாவது வளைவில் நிறுத்திவிட்டு புதர்களினூடாக நடந்து உபய மண்டபத்தை அடைந்திருந்தான். நாயகன், மற்ற நாயகர்களைப் போலவே குளிர் கண்ணாடி அணிந்திருந்தான். அப்போதுதான் முகச் சவரம் செய்துகொண்டிருந்ததால், அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்ததால் அழகாக இருந்தான். சுறுசுறுப்பாகத் தென்பட்டான். நாயகனுக்கே உரிய பாவனையில் அலட்சியமாக நடந்து காமராஜரின் சடலம் கிடத்தப்பட்டிருந்த மண்டபத்தை அடைந்தான். அப்போது சடலம் மூடப்பட்டிருக்கவில்லை. சடலத்தின் முகத்தைப் பார்த்தவுடன் நாயகனின் உடலில் அசாதாரணமான ஒரு நடுக்கம் பரவியது. உடனடியாகத் தொப்பியை அகற்றினான். குளிர்க் கண்ணாடியைக் கழற்றிப் பக்கத்திலிருந்த கான்ஸ்டபிளிடம் கொடுத்தான். பூட்சுகளைக் கழற்றிவிட்டு விரைப்பாக நின்று ஒரு சல்யூட் அடித்தான். என்ன காரணத்தாலோ நெற்றியிலிருந்து கையை எடுக்காமலும் விரைப்பைத் தளர்த்திக்கொள்ளாமலும் கொஞ்ச நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தான். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலைமைக் காவலரும் தவிர இரண்டு கான்ஸ்டபிள்களும் அவனுடன் வந்திருந்தனர்.

தன்னைப் போலவே சடலத்தைத் தீண்டிப் பார்ப்பதற்கு இன்ஸ்பெக்டர் விரும்பலாம் என இருபதடி தொலைவிலிருந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்த பரதேசி நினைத்தான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எந்தவொரு தருணத்திலும் அவன் அதற்கு முற்படவில்லை. ஒரு சடலம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுவிட்ட பிறகு அவனுக்குச் செய்வதற்கு அநேகமாக ஒன்றும் இருக்கவில்லை. அவனுடைய மேலதிகாரிகளின் உத்தரவை எந்தச் சிரமுமில்லாமல் அவனால் நிறைவேற்றிவிட முடியும். செய்ய வேண்டியவை வெறும் சடங்குகள்தாம். முதல் காரியமாகத் தான் பார்த்ததைப் பற்றி தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க வேண்டும். பிறகு மருத்துவரைக்கொண்டு அது சடலம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது, அதை அப்புறப்படுத்தி மார்ச்சுவரிக்குக் கொண்டு செல்வது, சவப் பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்வது, அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது என ஒவ்வொன்றும் அவனுக்குப் பழக்கமான நடைமுறைதான். முன்னதாக அங்கிருப்பவர்களிடம் சிறிய அளவில் ஒரு விசாரணை நடத்த வேண்டும். அவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அது மிகச் சுலபமான விஷயம். எல்லாவற்றுக்குமான வசனங்கள் தயாராகவே இருக்கின்றன. சடலத்தை முதன் முதலில பார்த்தது யார், எப்போது? சம்பந்தப்பட்ட நபர் அங்கு எதற்காக வந்தார்? சடலமாகக் கிடப்பவரை அங்கிருப்பவர்களில் யாருக்காவது அடையாளம் தெரியுமா? அதிகப் பட்சம் ஒரு மணி நேரத்திற்குள் எல்லாச் சடங்குகளையும் முடித்துக்கொள்ள முடியும். பொதுவாக இதைப்போன்ற நேர்வுகளில் சடலத்தை மார்ச்சுவரிக்குக் கொண்டு சேர்ப்பது வரை இன்ஸ்பெக்டர் வேறு எதன் மீதும் கவனம் செலுத்துவதற்கில்லை.

தான் பார்த்ததை மேலதிகாரிகளுக்குச் சொல்லிவிட்டு முதல் காரியமாகச் சடலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை இரண்டு கான்ஸ்டபிள்களிடம் ஒப்படைத்தான். பிணத்தைப் பிணம் என உறுதிப்படுத்துவதற்கு ஸ்டாதஸ் கோப்புடனும் ரத்த அழுத்த மாணியுடனும் மருத்துவர் ஒருவரையும் மருத்துவ உதவியாளரையும் ஆம்புலன்ஸ் ஒன்றையும் அனுப்பி வைக்கும்படி ஏற்கனவே மருத்துவ அதிகாரியைக் கேட்டுக்கொண்டிருந்தான் இன்ஸ்பெகடர். ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. மருத்துவர் பின்னால் தனது ஸ்கூட்டரில் வந்துகொண்டிருப்பதாக ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளன் சொன்னான்இவர்களைத் தவிர தடயவியல் நிபுனர், புகைப்படக் கலைஞர், பிணம் தூக்கும் நான்கு கடையர்கள் என வேறு சில முக்கியப் பாத்திரங்களுக்கும் நாடகத்தில் இடமிருந்தது. மருத்துவரைத் தவிர மற்ற எல்லோரும் தத்தமக்குரிய ஒப்பனைகளுடன் ஏற்கனவே வந்துவிட்டிருந்தனர். தாமதம் தேவையற்ற நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பதால் இன்ஸ்பெகடர் பதற்றமடைந்தான். மருத்துவரின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஒரு பாத்திரம் என்பதை மறந்து தேவைக்கும் அதிகமாக அவன் கோபப்பட்டான். பொதுவாக நாடகங்களில் இதுபோன்ற எதிர்பாராத நெருக்கடிகளின் குறுக்கீடுகளுக்கு இடமில்லை. இருந்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது நாயகனின் பொறுப்பாக இருப்பதில்லை. அது சூத்திரதாரிகளின் கவலை. நாயகன் உடனடியாகத் தன்னைச் சூத்திரதாரி யாகவும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தான். சடலத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள்களில் ஒருவனை அழைத்து மருத்துவரைக் கையோடு அழைத்துக்கொண்டு திரும்புமாறு பணித்தான். விரைப்பாக நின்று இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் ஒன்றை அடித்துவிட்டு அவன் புறப்பட்டான். சடலத்தைப் பாதுகாப்பதும் அதிலிருந்து துர்நாற்றம் வராமலும் பாதுகாக்க வேண்டியது எஞ்சியிருந்த கான்ஸ்டபிளின் தனிப்பொறுப்பானது. தன் சகா புறப்பட்டுப் போன அந்தத் தருணத்தில் அவன் அற்புதமான வசனம் ஒன்றைப் பேசியிருந்தான், “துர் நாற்றம் வராமல் மட்டுமல்ல சடலம் எழுந்துவந்துவிடாமலும்கூட என்னால் பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் கவலைப்படாமல் போகலாம்”.

ஒரு நாடகத்தில் மட்டுமே இடம்பெற முடிகிற வசனம் இது. பல அர்த்தங்களை உள்ளடக்கியது. யதார்த்தத்தில் சடலங்களைப் பாதுகாக்கிற ஒருவருக்கு இதுபோன்ற கற்பனை சாத்தியமேயில்லை. ஒரு சடலம் உயிர்த்தெழுவது பற்றிய சித்தரிப்புக்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் இடம்பெற்றிருக் கின்றன. அதன் விளைவுகள் மனித குல வரலாற்றில் பெரும் தாக்கங்களையும் உருவாக்கியிருக்கின்றன. இந்தக் கதையிலுங்கூட இதற்கு முன்னால் தென்படும் சித்தரிப்புக்களில் இதையொத்த ஒரு வசனத்தை யாரும்- பரதேசியோ, மாஸ்ட்டரோ இன்ஸ்பெக்டரோ அவனால் சித்தரவதைக் குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இருபத்தியேழே வயதான பெண்ணோ அவனுடைய பத்தொன்பது வயதுடைய செல்ல மகளோ வேறு யாருமோ கூட- பேசியிருந்திருக்கவில்லை. அவை, அந்தச் சித்தரிப்புக்கள் அறுபது எழுபதுகளின் கலைப்படங்களில் இடம்பெற்றிருந்த சித்தரிப்புக்களை ஒத்தவை. எதார்த்தத்தின் வரம்புகளைச் சற்றும் மீறாதவை. ஆனால் இது நாடகம். நாடகங்களில் பாத்திரங்கள் தமக்கென சுயேச்சையான சில அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொண்டு விடுகின்றன. சூழலுக்கு இசைவான, அதன் அர்த்தத்தைக் குலைக்கிற, அதை முற்றாக மாற்றிவிடக்கூடிய ஒரு வசனத்தைச் சூத்திரதாரியின் ஒப்புதலின்றியே அதன் எந்தவொரு பாத்திரத்தாலும் உச்சரித்துவிட முடியும். அந்தக் கான்ஸ்டபிள் அப்படியொரு வசனத்தையே உச்சரித்திருந்தான். அதைக்கேட்டு அந்த மற்றொரு கான்ஸ்டபிள் குழப்பமடைந்தான். ஆனால் மருத்துவரை அழைத்து வரும்படி பணிக்கப்பட்டிருந்ததால் உடனடியாக மேடையை விட்டு வெளியேறினான். சற்று தொலைவிலிருந்த இன்ஸ்பெக்டரால் அந்த வசனத்தைக் கேட்டு வாய்விட்டுச் சிரிக்க முடிந்திருந்தது. ஒரு பாத்திரமாக இருந்ததால்தான் அவனால் அப்படிச் சிரிக்க முடிந்தது. எதார்த்தத்தில் இப்படிச் சிரிக்கும்படியான சந்தர்ப்பங்கள் அநேகமாக அவனுக்கு வாய்ப்பதில்லைதனது உத்தியயோக ரீதியிலான கடமைகளின் ஒரு பகுதியாக இருபத்தேழே வயதான ஒரு இளம்பெண்ணின் யோனியில் லத்தியைச் செருக உத்தரவிடும்போதோ மரணத்தை வரவேற்கும் விதத்தில் புன்னகைக்க முற்படும் அவளது உதடுகளின் மீது மூத்திரத்தைப் பீய்ச்சியடிக்கும்போதோ அவளை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கும்போதோ இதயம் ஒரு கல்லாகவே மாறிவிட்டிருந்தாலும் கூட ஒருவனால் சிரிக்க முடியாதல்லவா? அதே போன்றதுதான் ஒருவருடைய செல்ல மகள் அவரது முகத்தின் மீது காறித்துப்பும்போது, கோழையும் எச்சிலும் பரவி வழியும் முகத்தை நிலைக் கண்ணாடி ஒன்றின் முன் நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது, பிறகு கைக்குட்டையால் துடைத்துக் கொள்ளும்போது சிரிக்க முடியாமல் போவதும்.

எட்டு

நாடகமாகக் கற்பனை செய்துகொண்டிருந்ததால்தான் தாமதமாக வந்த அந்த இளம் மருத்துவர் வெள்ளை நிறக் கோட், டை சகிதமாக வந்து நின்றதைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க எல்லோருக்கும் முடிகிறது. சூத்திரதாரியாக மாறிவிட்டிருந்த இன்ஸ்பெக்டர் புகைப்படக் கலைஞரைத் தவிர மற்ற எல்லோரையும் உடனடியாகப் பணியைத் தொடங்கி முடிக்கும்படி உத்தரவிட்டான். தான் சொல்லும்வரை காமிராவை வெளியே எடுக்கக்கூடாது என்பது அவனுக்கு இடப்பட்ட கட்டளை. அவனுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அழத் தயாராகிக்கொண்டிருந்தான். மற்ற யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. தடயவியல் நிபுணர் சடலத்தை மையப் புள்ளியாகக் கொண்டு சாக்குக் கட்டியைக்கொண்டு ஆறடி ஆரமுடைய வட்டமொன்றை வரைந்தார். பிறகு ஒரு  டப்பாவிலிருந்த வெள்ளைப் பவுடரை அதற்குள் தூவினார்சடலத்தினருகே கிடந்த காந்தி படம் அச்சிடப்பட்ட அழுக்கடைந்த துணிப்பை கைப்பற்றப்பட்டு நாயகனிடம் ஒப்படைக்கப்பட்டது. நாயகன் தன் சப் இன்ஸ்பெகடரின் உதவியுடன் அதைக் கவனமாகச் சோதனையிட்டான். பழைய கதர் வேட்டி ஒன்றும் சட்டையும் துண்டும். அவை தவிர காந்தியின் சத்திய சோதனை ஒன்றிருந்தது. மிகப் பழைய பதிப்பு. தாள்கள் மஞ்சள்பாரித்துப் போயிருந்தன. உடைகளிலிருந்து மட்கிய வியர்வை நெடி வீசிற்று. சோதனைக்குப் பிறகு அவற்றைப் பாலிதீன் பை ஒன்றில் பொதிந்து எடுத்துக்கொண்டார் தடயவியல் நிபுனர். கை ரேகைப் பதிவுகளை அவசரஅவசரமாகச் சேகரித்துக்கொண்டு மருத்துவருக்கு வழிவிட்டிருந்தார் தடயவியல் நிபுணர். தாமதமாக வந்ததற்காக ஏற்கனவே தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த மருத்துவர் மிகமிகக் கவனமாக சடலத்தைச் சோதித்தார். சடலம் விரைத்துப் போயிருந்ததால் அதைச் சடலம் என முடிவு செய்வதற்கு வேறு சோதனைகளுங்கூடத் தேவைப்பட்டிருக்கவில்லை. எச்சரிக்கையோடு அதன் இடப்புற மார்பில் ஸ்டாதெஸ்கோப்பை வைத்து இரண்டு விரல்களால் மெதுவாக அழுத்தினார். தீண்ட வேண்டியிருந்திருக்கும் என்பதால் ரத்த அழுத்தத்தைச் சோதிக்கும் கருவியைப் பயன்படுத்தவேயில்லை. பிறகு உடனடியாக அது சடலம்தான் என உத்தரவாதமளிக்கும் சான்றைப் பூர்த்தி செய்து இன்ஸ்பெகடரிடம் அளித்தார். சடலம் இன்னும் அழுகத் தொடங்கவிலலை. துர்நாற்றம் எதுவும் அதனிடமிருந்து வீசத் தொடங்கியிருக்கவில்லை என்றாலும் யூடிக்கோலன் தெளிக்கச் சொல்லிக் கட்டளையிட்டிருந்தான் இன்ஸ்பெக்டர். சடலத்தைக் கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் தேவைப்படும் எல்லா உபகரணங்களுடனும் தார்ச்சாலையின் ஒன்பதாவது வளைவில் நின்றது.

சில சடங்குகள் எஞ்சியிருந்தன.

அது காமராஜருடைய சடலம் அல்ல என யாராவது இரண்டு பேரிடம் ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டும். பிறகு யாராலும் பார்க்கமுடியாதபடி அதைப் போர்த்தி மூடிவிட வேண்டும். அதற்காகக் கித்தான் ஒன்றைத் தயாராக வைத்திருக்கும்படி உத்தரவிட்டான் இன்ஸ்பெக்டர். செய்யவேண்டி யவற்றைப் பதற்றமின்றியும் ஒன்றன்பின் ஒன்றாகவும் வரிசைக் கிரமமாகவும் செய்ய முடிவெடுத்தான். படிக்கட்டு ஒன்றில் அருகருகே உட்கார்ந்திருந்த பரதேசியையும் மாஸ்ட்டரையும் விசாரணைக்£ அழைத்து வரச் சொன்னான்.

சடலத்தை முதலில் பார்த்தவன் எனச் சொல்லப்பட்ட பரதேசியை விசாரித்தான். மாஸ்ட்டர் உள்ளிட்ட மற்ற ஆள்களிடமிருந்தும் வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டான். எல்லாமே சீராக நடந்தபோதும் பரதேசியும் மாஸ்டரும் கொஞ்சம் தொந்தரவு கொடுத்துவிட்டிருந்தனர். சடலமாகக் கிடக்கும் நபர் யாரென்று தெரியுமா எனக் கேட்டபோது இருவரும் ஒரே குரலில் அது காமராஜர் எனச் சொல்லியிருந்தனர். மேலதிகாரிக்கு விருப்பமான, கட்டாயமாகத் தேவைப்பட்ட பதில் அது காமராஜர் அல்ல, அடையாளம் தெரியாத நபர் என்பது. அதைச் சொல்ல வைப்பதற்குத் திணற வேண்டியிருந்தது.

அது காமராஜர்தானா? நல்லாத் தெரியுமா?”

நல்லாத் தெரியும் சார், அது காமராஜர்தான். பெருந்தலைவர் காமராஜர்

சியெம்மா இருந்தாரே அவரா?”

அவரேதான் சார். கல்விக் கண் கொடுத்த காமராஜர்

நீங்க அவரப் பாத்திருக்கீங்களா?”

பாத்திருக்கோம் சார்

நாங் கேக்கறது நேர்ல, நேர்ல அவர உயிரோட பாத்திருக்கீங்களான்னுதான்

மாஸ்ட்டர் பதற்றமில்லாமல் அதற்குப் பதிலளித்தான், “சார் அவர் எனக்குக் கடவுள். கடவுள நேர்ல பாத்துத்தான் நம்போணும்னு இல்லீங்களே சார்என்றான். குரல் தழுதழுத்ததுஇன்ஸ்பெக்டர் அது நாடகம் என்பதையும் தான் அதில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் என்பதையும் மற்நதுவிட்டவன் போல் தென்பட்டான். அவனுக்கு ஆத்திரம் பெருகிக்கொண்டிருந்தது. சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான்.

ஆனா உன்னோட கடவுள் செத்து கிட்டத்தட்ட நாப்பது வருஷமாச்சு. சரியாச் சொல்லணும்னா முப்பததொன்பது வருஷம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தாறு அக்டோபர் மாசம் ரண்டாந் தேதி. அண்ணைக்குக் காந்தி ஜெயந்தி
பரதேசி புன்னகைத்தான். அவர் சொன்னது காதில் விழாதது போல் திடமான குரலில் சொன்னதையே திருப்பிச் சொன்னான்.

அது காமராஜர்தான் சார். பெருந்தலைவர் காமராஜர்

இன்ஸ்பெக்டர் பொறுமையை இழந்துகொண்டிருந்தான்.

பாருங்க சாமியார், அந்த ஒடம்பப் பாத்தா டெத் இப்பத்தான் நடந்துருக்குங்கறது தெரியுது. ஆனா அவரு முப்பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாலயே அவர எரிச்சுட்டாங்க. வருஷா வருஷம் அக்டோபர் ரெண்டாந்தேதி  அவருக்கு வருஷாந்திரம் கொண்டாடுறாங்க. நீங்க சொல்றதப் பாத்தா அவரு மறுபடியும் பொளச்சு வந்திருக்கணும். இது சயின்டிபிக்காத் தெரியலஎன்றான். தனது இந்த விளக்கம் பரதேசியின் பதிலில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தான்.

ஆனா அது காமராஜர்தான்என தணிந்த அமைதியான குரலில் பதிலளித்தான் பரதேசி.

இன்ஸ்பெக்டர் கடுங்கோபம் கொண்டு அவனை, “முட்டாள்என்றான்.

தன் வலுவான கரத்தால் பரதேசியின் கன்னத்தில் பளீரென அறைந்தான். தடுமாறிக் கீழே விழப்போன பரதேசி சுதாரித்துக்கொண்டு மறுகன்னததைக் காட்டினான். இன்ஸ்பெக்டர் அதற்கும் ஓர் அறை கொடுத்தான். பரதேசி படிகளில் மல்லார்ந்து விழுந்தான். சுயகட்டுப்பாட்டை முற்றாக இழந்திருந்த இன்ஸ்பெக்டர்  பூட்ஸ் அணிந்த தன் கால்களில் ஒன்றைத் தூக்கி அவனது மார்பின் மீது வைத்து நசுக்க முற்பட்டான். பதற்றத்துடன் எழுந்த மாஸ்ட்டர் இன்ஸ்பெக்டரின் காலைப் பற்றிக்கொண்டான்.

சார் விட்டுடுங்க, பாவம் பெருசு. அதுக்குக் கொஞ்சம் மூளக் கோளாறு. அது 

“காமராஜரில்ல. நா அதுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வெக்கறேன்

இன்ஸ்பெக்டர் பரதேசியை விடுவித்தான்.

அப்ப அது யாருடைய பிணம்?”

யாரோ, அடையாளந் தெரியாத யாரோ. ஒரு வேள அனாதப் பொணமா இருக்கும்

இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டரை அழைத்தான்.

இவுங்க ரண்டு பேருத்துகிட்டயும் ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்குய்யா

அது காமராஜரோட பாடி இல்லேன்னுதாங்கய்யா? தெளிவா எழுத வாங்கீடறேன்

முட்டாள்என அந்த சப் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு வசைச்சொல்.

அடையாளந் தெரியாத பொணம்னு ஆனதுக்கப்புறம் காமராஜர எதுக்குய்யா வம்புக்கிழுக்கறே?”

ஆனா அது காமராஜர்தானேங்கய்யா?” எனப் பணிவாகக் கேட்டான் சப் இன்ஸ்பெக்டர்.

நம்ம ஜீப்புல அவரோட படங்கூட ஒண்ணு இருக்குதுங்கய்யா? பாக்கறீங்களா?”

ஏதோ நினைவில் சரி என்பது போல் தலையசைத்தான் இன்ஸ்பெக்டர். நடுத்தர வயதைக் கடந்துகொண்டிருந்த அந்த சப் இன்ஸ்பெக்டர் குதூகலத்துடன் ஒன்பதாவது வளைவை நோக்கி ஓடினான். திரும்பிவந்தபோது மூச்சிரைத்தது. கையில் சட்டமிடப்பட்டதொரு காமராஜரின் கருப்பு வெள்ளைப் புகைப்படம். கூர்ந்த மேல்நோக்கிய பார்வை, விடைத்த நாசி, தடித்த உதடுகளில் உறைந்த சிறு புன்னகை. இவரைத்தான் கடவுள் என்கிறார்கள். கருப்பு வெள்ளைக் கடவுள்.

இவரும் மண்டபத்துல சடலமாக் கெடந்துக்கிட்டிருக்கறவரும் ஒண்ணுதானேங்கய்யா?”

இன்ஸ்பெகடர் படத்தைத் திருப்பிக்கொடுத்தான்.

ஏதுய்யா இந்தப் படம்?”

அந்த டீச்சர் வீட்டுல இருந்து எடுத்துக்கிட்டு வந்ததுங்கய்யா. சீஸ் பண்ணிக் கொண்டாந்த மத்த ஐட்டங்களோட தவறிப் போயி இதையும் கொண்டாந்துட்டாங்க. நாந்தான் எதுக்கும் இருக்குட்டும்னு எடுத்து வெச்சிருந்தேன்

செரி, இருக்கட்டும். அத அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல இவங்க ரண்டு பேருத்துகிட்ட இருந்தும் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கு, டயமாகிக்கிட்டிருக்குஎனத் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

பிறகு அந்த சப் இன்ஸ்பெக்டர் பரதேசியையும் மாஸ்டரையும் தனியே அழைத்துக்கொண்டு போனான். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள் ஒருவனை அழைத்துப் பிணத்தை அப்புறப்படுத்துவதற்கான ஆட்கள் வந்துவிட்டார்களா எனக் கேட்டான். நான்கு பேர் அதற்குத் தயாராக இருந்தார்கள். ஸ்ட்ரெச்சர் இருக்கிறது. ஆம்புலன்ஸ் ஒன்பதாவது வளைவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இனி மிஞ்சிப் போனால் அரை மணி நேரம். நாடகம் தனது இறுதிக் கட்டத்தை நோக்கி வேகமாக நகரத் தொடங்கியிருந்தது. பிணத்தை அப்புறப்படுத்து வதற்காக வந்திருந்த நான்கு பேரும் காமராஜரின் சடலம் கிடந்த உபய மண்டபத்தை நோக்கிச் சென்றதைப் பார்த்த பரதேசி, மாஸ்ட்டர், வனக் காவலர்கள், மலையிலிருந்து இறங்கிவந்திருந்த சர்க்கரை வியாதியால் பீடிக்கப்பட்ட தம்பதிகள் உள்ளிட்ட பணிரெண்டு பேரும் அதை அருகிலிருந்து பார்க்கும் ஆவலில் சற்று நெருங்கி வந்து நின்றுகொண்டனர். சடலத்திலிருந்து துர்நாற்றம் எதுவும் வீசாதபோதும் நான்கு பேரும் முகத்தில் மாஸ்க்குகளைக் கட்டிக்கொண்டனர். ஒருவன் சிரசை அடைந்தான். மற்றொருவன் இரண்டு கால்களையும் சேர்த்துப் பற்றினான். மற்ற இரண்டு பேரும் வலமும் இடமுமாய் நின்று முதுகுக்குக் கீழே கைகளை நுழைக்க முயன்றுகொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் ஐந்தடி தொலைவில் நின்றான். “டயமாச்சு, தூக்குங்கஎனக் கடுமையான குரலில் உத்தரவிட்டான்.

நான்கு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். புன்னகைத்துக் கொண்டார்கள். பெருமூச்சு விட்டார்கள். பிறகு ஆகட்டும் என்பது போல அவர்களில் ஒருவன் தலையசைத்தான்.

ஒன்பது

நான்கு பேரும் வலுவான தேகக்கட்டினைக் கொண்டிருந்தார்கள். அசாதாரண மன உறுதி படைத்தவர்களாகவும் தென்பட்டனர். பிணங்களை அப்புறப் படுத்துவதை புனிதமான தொழிலாகக் கருதுபவர்கள். பிணம் என்பது யாருடையதாக இருந்தாலும் பிணம்தான் எனக் கருதுபவர்கள். பிணங்களை கைப் பற்றுவதில், கிடக்கும் இடத்திலிருந்து அவற்றைத்  தூக்குவதில், மார்ச்சுவரி அல்லது சவக்குழிகளில்  கிடத்துவதில் பல நுட்பங்களைக் கையாளத் தெரிந்தவர்கள். இந்தத் தொழிலில் பல வருட அனுபவம் உள்ளவர்கள். ஒரு பிணத்தைப் பார்த்த உடனேயே அது பிணமா இல்லையா என்பதைச் சொல்லிவிடும் தோந்த அறிவு நால்வருக்குமே உண்டு. பயங்கரமாகக் குடிப்பவர்கள் என்பதுதான் அவர்களைப் பற்றி நிலவும் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அது தவிர்க்கப்பட முடியாதது, தேவையானது என்பது அவர்களுக்கு ஆதரவான சிலரது வாதம். அவர்கள் போதையில் இருந்ததை இன்ஸ்பெக்டர் ஏற்கனவே கவனித்திருந்தான். அவர்கள் வந்து சேர்ந்த உடனேயே அந்த இடத்தை ஆல்ஹகால் நெடி சூழத்தொடங்கியிருந்தது. எந்தக் கவலையுமற்றவர்களாகத் தென்பட்டார்கள். சிரித்துக்கொண்டே இருந்தார்கள். தாங்கள் அன்று அப்புறப்படுத்த வேண்டியிருந்த சடலம் மகத்தான மனிதர் ஒருவருடையது என்பது பற்றிய பெருமிதம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் பிணத்தைத் தூக்குவதற்கு அவர்கள்  தேவைக்கதிகமாக நேரம் எடுத்துக்கொள்வதாக இன்ஸ்பெக்டர் கருதினான். அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. ஒருவருக்கொருவர் கண்களைச் சிமிட்டிக்கொள்கிறார்கள். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறார்கள். நாக்கைத் கடித்துக்கொள்கிறார்£கள். நான்கு உடல்களிலிருந்தும் வியர்வை ஊற்றெடுத்துப் பெருகுகிறது. தணிந்த குரலில் தமக்குள் எதையோ விவாதிக்கிறார்கள். திடீரெனத் தம் நிலைகளை மாற்றிக்கொள்கிறார்கள். கால் மாட்டில் இருந்தவன் தலைமாட்டுக்கு வருகிறான். தலை மாட்டில் இருந்தவன் வலப்பக்கம் போய் நின்று கொள்கிறான். அஞ்சலி செலுத்துபவர்களைப் போல சில நொடிகள் தலையைக் குனிந்து மௌனமாக நிற்கிறார்கள். பிறகு மீண்டும் குனிகிறார்கள். அவரரவருக்குமுரிய பாகங்களைப் பற்றுகிறார்கள். தலையை, கால்களை, தோள்களை. ஆனால் அவர்களுக்கும் தாம் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடகத்தின் பாத்திரங்கள் என்பது புரிந்துவிட்டது போல் தோன்றுகிறது. அதற்கேற்றார் போல் ஏதாவது சத்தமெழுப்ப முற்படுகிறார்கள்.

ஏலேலோ

ஐலசா

ஏலேலோ

ஐலசா

ஏலேலோ

ஐலசா

இன்ஸ்பெக்டர் அதை ஒழுங்கீனத்தின் அடையாளமாகக் கருதுகிறான்நால்வருக்கும் ஒரே நேரத்தில் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போதே நால்வரும் திடீரென மௌனமாகிவிடுகிறார்கள். சடலத்தைச் சுற்றி ஆளுக்கொரு மூலையில் மண்டியிட்டு உட்கார்ந்துகொள்கிறார்கள். கண்களை மூடிக்கொள்கிறார்கள். எதையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்கள். உதடுகள் நம்ப முடியாத வேகத்துடன் அசைந்துகொண்டிருக்கின்றன. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அது ஒரு பிரார்த்தனை போல் தென்படுகிறது. இன்ஸ்பெக்டர் அவர்களைப் பார்த்து, “ஹேய்ய்...” என உரத்த குரலில் கத்துகிறான்நிச்சயமாக அது நாடகமொன்றின் காட்சி. பிறகு நால்வரும் மிகச் சோர்வுற்றவர்களாகவும் தோல்வியுற்றவர்களாகவும் அவமானப்படுத்தப் பட்டவர்களாகவும் திரும்பி வருகிறார்கள். இன்ஸ்பெக்டரின் முன்னால் குனிந்த தலையுடன் நிற்கிறார்கள். நால்வருக்காகவும் அவர்களில் ஒருவன் பேசத் தொடங்குகிறான். எவ்வளவு முயன்றும் அவர்களால் விரைத்துப்போன அந்தச் சடலத்தை அகற்ற முடியவில்லை. ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. சடலம் ஒரு மரத்தைப் போல அந்த இடத்தில் வேர்கொண்டுவிட்டது. இன்ஸ்பெக்டர் முட்டாள் எனக் கத்துகிறான். பரதேசிக்குக் கொடுத்தது போல அவர்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுடைய கன்னத்திலும் ஓர் அறை கொடுக்கிறான்அவனுக்கு உடல் நடுங்குகிறது. உடல் முழுவதும் குப்பென்று வியர்த்துவிடுகிறது. அந்த நால்வரும் தமது பலம் முழுவதையும் இழந்துவிட்டவர்களைப் போல தட்டுத் தடுமாறி நடந்து சென்று பரதேசியும் மாஸ்ட்டரும் மற்ற பத்து நபர்களும் நின்றுகொண்டிருக்கும் இடத்தை அடைகிறார்கள். பிறகு மற்றவர்களுடன் சேர்த்து தங்களையும் பார்வையாளர்களாக மாற்றிக்கொண்டு விடுகிறார்கள்.


இன்ஸ்பெக்டர் குழம்பினான். இடிந்துபோனவனாகத் தென்பட்டான்படிக்கட்டொன்றில் உட்கார்ந்தான். யோசித்தான். பெருமூசசெறிந்தான். தன் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டான்.

நிலமை மோசமாக இருக்கிறது. மிக மோசமாக இருக்கிறது.

எல்லாக் கதைகளையும் அவர்களுக்குச் சொன்னான்.

நீண்ட நேரம் மறுமுனையிலிருந்து வந்த உத்தரவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி தலையசைத்தான். இணைப்பைத் துண்டித்துவிட்டுத் தனியாக நடந்து சென்று ஒரு படிக்கட்டில் உட்கார்ந்தான். சிகரெட் ஒன்றைக் கொளுத்தி உதடுகளிடையே பொருத்திக்கொண்டு மீண்டும் யோசனையிலாழ்ந்தான்.
அவனது முகம் சுடர்கிறது. பரவசத்தில் மூழ்கத் தொடங்குகிறது. அசாதாரண மான ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல அவன் எழுந்து நிற்கிறான். மண்டபத்தை அடைந்து ஒரு பழந்துணி மூட்டையைப் போல தார்பாலின் ஒன்றிற்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ள சடலத்தைப் பார்க்கிறான். சப் இன்ஸ்பெக்டரை அழைத்து பொக்லைன் இயந்திரமொன்றை உடனடியாகத் தருவிக்குமாறு உத்தரவிடுகிறான். சப் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியால் உறைந்து போகிறான்.

பொக்லீனாங்கய்யா?”

ஆமா, பொகலீன்

பரதேசி, மாஸ்ட்டர், சர்க்கரை வியாதியஸ்த்தர்களான தம்பதி உள்ளிட்ட மற்ற எல்லோருடனும் சடலத்தை அகற்றும் முயற்சியில் தோல்வியடைந்து அவர்களோடு சேர்ந்துகொண்டிருந்த நால்வரும்கூட கடும் அதிர்ச்சிக் குள்ளானவர்களைப் போல் தென்பட்டனர்.

பத்து

பொக்லைன் எந்திரம் மலைப்பாதையின் ஒன்பதாவது வளைவை வந்தடை வதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது. இயந்திரத்தை ஓட்டி வந்தவன் பதினெட்டு வயதுகூடப் பூர்த்தியாகியிருக்காத சிறுவன். மிஞ்சிப் போனால் பதினாறு பதினேழு வயதுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. இயந்திரத்தின் உரிமையாளனான தன் தந்தை ஏதோ வேலையாக வெளியூர் போய்விட்டதாகச் சொன்னான். இன்னும் குரல் முதிர்ந்திருக்கவில்லைதோற்றத்திலும் பெண்மையின் சாயல். அவனுக்குத் தன் மகளின் ஞாபகம் வந்தது. மற்றொரு சாயலில் இருபத்தியேழு வயதான அந்தப் பள்ளி ஆசிரியையும் நினைவூட்டுபவனாய் இருந்தான். முதன் முதலாக அவள் அவனிடம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டபோது அவள் ஒரு குழந்தையைப் போல் சிரித்ததை நினைவூட்டிக்கொண்டான். காட்டன் சேலை ஒன்றை உடுத்திக்கொண்டிருந்தாள்முந்தானையை இழுத்து சரிந்து விடாமலிருப்பதற்காக விரல் நுனியில் சுற்றிக்கொண்டிருந்தாள். அவனிடம் அவளுக்குப் பயமில்லாதது போல் தெரிந்தது. கேள்விகளுக்குத் தயக்கமில்லாமல் பதிலளித்தாள். அவன் அவளது உதட்டுக்கு மேலே லேசாக அரும்பியருந்த பூனை முடியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறுவன் அந்தப் பள்ளி ஆசிரியையைவிட ஸ்ரீ தேவியின் சாயலையே அதிகம் கொண்டிருந்தான். சிறுமியாக இருந்தபோது ஸ்ரீ தேவி இந்தச் சிறுவனைப் போலவே இருந்திருக்கக்கூடும். ஒரு பழைய சினிமாவில் முருகன் வேடத்தில் அந்த வயதுள்ள ஸ்ரீ தேவியைப் பார்த்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு. பிறகு திடீரென அந்தச் சிறுவன் முருகனின் சாயலில் இருப்பதாகத் தோன்றியது இன்ஸ்பெக்டருக்கு. காமராஜரைப் பார்ப்பதற்காக மலைமீதிருந்து அவனும்கூட இறங்கி வந்துவிட்டானோ என்னவோ? வந்திறங்கியிருப்பது மயில் வாகனத்திலா பொக்லீன் இயந்திரத்திலா?

அதற்கு மேல் கற்பனை செய்யப் பயந்தான் இன்ஸ்பெக்டர்.

அவனால் அந்த இயந்திரத்தைத் திறமையாகக் கையாள முடியுமா எனக் கறாராக ஒரு கேள்வியைக் கேட்டுத் தன்னை அக்கற்பனைகளிடமிருந்து மீட்டுக்கொள்ள எத்தனித்தான். சிறுவன் அதற்கு மிகுந்த தன்னம்பிக்கையோடு பதிலளித்தான். எப்போதுமே இந்த இயந்திரத்தை இயக்குபவன் அவன்தான் என்றான்.

ஆனால் அவனிடம் கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா?

சிறுவன் அவனது கேள்வியைப் பொருட்படுத்தாமல் காட்டை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

வண்டி ஒன்பதாவது வளைவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. அதை உபய மண்டபத்தை ஒட்டிக் கொண்டுவந்து நிறுத்துவதற்கு வழியில் இருந்த சில மரங்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும் என்றான் சிறுவன். இன்ஸ்பெக்டர் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தோல்வியுற்றுத் தம்மைப் பார்வையாளர்களாக மாற்றிக்கொண்டிருந்த நால்வரையும் அழைத்து அதைச் செய்ய உத்தரவிட்டான். ஏற்கனவே அவமானத்தால் குன்றியிருந்த அவர்கள் திடீரெனத் தாங்கள் குற்றேவலர்களாக மாற்றப்பட்டிருப்பதைக் குறித்த துக்கத் துடன் தாங்கள் வந்த ஆம்புலன்ஸ் வண்டியிலிருந்து கடப்பாறைகளையும் அரிவாள்களையும் மரங்களை அறுப்பதற்கான ரம்பங்களையும் எடுத்துக்கொண்டு வந்தனர்.

சிறுவன் நான்கு பேருக்கும் வழிகாட்டினான். சில மரங்களை அடியோடு அப்புறப்படுத்த வேண்டும். அந்தக் காரியத்தைப் பொக்லீன் பார்த்துக்கொள்ளும். அவர்கள் சில மரங்களின் கிளைகளை நறுக்கிவிட்டால் போதும்வழியை அடைத்துக்கொண்டு கிடக்கும் பாறைகளைத் தன் இயந்திரத்தைக்கொண்டு அவனே அகற்றிவிடுவான். தேவையான உத்தரவுகளைக் கொடுத்துவிட்டு இன்ஸ்பெகடரிடம் வந்தவன் தனது இயந்திரத்தைக் கொண்டு செய்ய வேண்டிய வேலை என்ன என்று கேட்டான். இன்ஸ்பெக்டர் குழம்பினான். ஒரு சடலத்தை அப்புறப்படுத்துவதற்காக அதுபோன்ற ராட்சத இயந்திரமொன்றை வரவழைக்க நேர்ந்தது பற்றி அப்போதுதான் அவன் யோசிக்கத் தொடங்கியிருந்தான். உண்மையில் அது முட்டாள்தனமான, கேலிக்கிடமான நடவடிக்கை. நாயகன்  ஒரு பிணத்திடம் தோற்றிருப்பதாகவே  அவனது இந்த நடவடிக்கை அர்த்தப்படுத்திக் கொள்ளப்படும். அப்போதுதான் சடலத்தை அப்புறத்தப்படுத்துவதில் அந்த நான்கு பேரும் அடைந்த தோல்வி போலியானதாக  ஏன் இருந்திருக்கக்கூடாது என யோசிப்பதற்கு அவனால் முடிந்தது. சிறுவன் தன் ஒரு கேள்வியில் அவனது கண்களைத் திறந்துவிட்டிருக்கிறான்.

அவர்களுடைய எல்லா முயற்சிகளும் பெருமூச்சுக்களும் அவர்களது உடல்களில் ஊற்றெடுத்துப் பெருகிய வியர்வையும் தோல்வியை ஒப்புக் கொண்டபோது முகங்களில் தென்பட்ட அவமானமும் சோர்வும் வெறும் பாவனைகளாக ஏன் இருந்திருக்கக் கூடாது? சடலம் காமராஜருடையது என்பதை அங்கு வந்து சேர்வதற்கு முன்பேகூட அவர்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். அப்புறப்படுத்தும் விருப்பம் இல்லாமலும் அது ஒரு நினைவுச் சின்னமாக என்றென்றைக்குமாக இருந்துவிடட்டும் எனத் தீர்மானித்துக்கொண்டும் வந்திருக்கக்கூடும். உண்மையில் சடலத்தை அப்புறப்படுத்துவதையே தொழிலாகக் கொண்ட நான்கு அற்பப் பிறவிகளால் அவன் சுலபமாக     ஏமாற்றப்பட்டிருக்கிறான் என்பதுதான் அதற்குப் பொருள். எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது என முடிவு செய்தான் இன்ஸ்பெக்டர். அவர்கள் தன்னை முட்டாள் என நினைத்தால் அப்படியே நினைத்துக்கொள்ளட்டும். அந்த நான்கு பேரையும் சடலத்தை முதலில் பார்த்து அது காமராஜருடைய சடலம் எனச் சொன்ன பரதேசியையும் அவனுக்குத் துணையாக வந்து தனது தோல்வியின் பார்வையாளர்களாக இருந்துகொண்டிருக்கும் மற்ற எல்லோரையும் அவமானப்படுத்துவதென முடிவு செய்தான்.

சடலத்தை வந்திருக்கும் பொக்லீன் இயந்திரத்தின் உலோகத்தாலான கரங்களைக் கொண்டு இழுத்து வந்து அவர்களுடைய காலடியில் போட வேண்டும். இது அவர்கள் எல்லோருடனும் கூடவே தன்னை அவமானத்துக்குள்ளாக்கிய சடலத்தையும் சேர்த்தே தண்டிக்கும் செயல்

சிறுவன் பொறுமையிழந்துகொண்டிருந்ததைக் கவனித்த இன்ஸ்பெக்டர் அவனைத் தானே நேரடியாக சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றான். சடலம் தார்பாலினால் மறைக்கப்பட்டிருந்தது. இது சிறுவனுக்குக் கேலியாகத் தென்படக்கூடும். ஆனால் குற்றம் தன்னுடையதல்ல. சடலத்துக்குப் போர்த்த கதர்த் துணி ஒன்றைக் கொண்டுவரச் சொன்னால் அது கிடைக்கவில்லையென்று தார்ப்பாலினைக் கொண்டு வந்திருந்த சுகாதாரத்துறை ஆட்களின் குற்றம். தருணம் வாய்க்கும்போது இதைச் சிறுவனுக்குச் சொல்லிவிட வேண்டும். ஆனால் முதல் பார்வையிலேயே அது சடலம் என்பதைக் கண்டுபிடித்திருந்தான் சிறுவன்.

இது ஒரு சடலமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்எனத் தனது வயதுக்குப் பொருத்தமற்ற தோரணையில் இன்ஸ்பெக்டரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டு சொன்னான்.

ஒரு சடலத்தை அப்புறப்படுத்துவதற்காக பொக்லீனைப் பயன்படுத்தும் அதிசயத்தை நான் இப்போதுதான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறேன்என்றான்.

இன்ஸ்பெகடர் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

உண்மைதான். ஆனால் இது மற்ற சடலங்களைப் போன்றதல்லஎனப் பதிலளிப்பதைத் தவிர அப்போது அவனுக்கு வேறு எந்த வழியுமிருந்திருக்கவில்லை. சிறுவன் அதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பாதவனாக வெளியே வந்தான். மரங்கள் வெட்டப்படுவதை ஒரு பார்வை பார்த்தவன் இன்ஸ்பெக்டர் புகைபிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து தனக்கும் ஒரு சிகரெட் தேவைப்படுவதாகச் சொன்னான்.

எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டேன்

இன்ஸ்பெக்டர் ஒன்றுமே சொல்லாமல் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான். சிறுவன் ஒன்றை உருவியெடுத்து உதடுகளுக்கிடையே பொருத்திக்கொண்டு தீப்பெட்டிக்காகக் கை நீட்டினான்.

நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும்எனத் தணிந்த குரலில் அவனிடம் கேட்டான் இன்ஸ்பெக்டர்.

சிறுவன் என்ன என்பது போல் பார்த்தான். அவனது வாய்க்குள்ளிருந்து வெளியேறிக்கொண்டிருந்த புகை சிறிய மேகம் போல் இன்ஸ்பெக்டரின் முகத்துக்கு முன்னால் மிதக்கத் தொடங்கியிருந்தது.

சடலத்தை நீங்கள் அதோ அவர்களுடைய காலடியில் வைக்க வேண்டும்எனச் சற்றுத் தள்ளி வரிசையாக நின்றுகொண்டிருந்தவர்களைச் சுட்டிக்காட்டிச் சொன்னான். பொக்லீன் அங்கு வருவதற்கான பாதையைச் செப்பனிட்டுவிட்டுவந்திருந்த நால்வரையும் சேர்த்துக்கொண்டு யாரும் கேட்டுக்கொள்ளாமலேயே ஓர் ஒழுங்கு வரிசையை அமைத்துக் கொண்ருந்தார்கள் மற்றவர்கள். சிறுவன் அவர்களைக் கூர்ந்து பார்த்தான்.

ஒரு சமர்ப்பனம் போலவா?”

ஆமாம், சமர்ப்பனம் போல இது ஒரு அற்புதமான உருவகம்இன்ஸ்பெக்டர் 
அச்சிறுவனை வியந்தான்.

சிறுவன் குதூகலமுற்றவனைப் போலத் தென்பட்டான். சிகரெட்டின் கரிந்த துண்டைச் சுண்டியெறிந்துவிட்டு தன் இயந்திரத்தை நோக்கி நடந்தான். இன்ஸ்பெக்டர்  தான் எங்கே நிற்பது என யோசிக்க்த தொடங்கியிருந்தான். அதற்குள் அந்தப் பொக்லீன் இயந்திரத்தின் ஓசை மூர்க்கமாகப் பரவத் தொடங்கியருந்தது. முதலில் வெட்டப்பட்டுப் பாதையில் சாய்க்கப்பட்டிருந்த மரங்களையும் சில பாறைத் துண்டுகளையும் அகற்ற வேண்டியிருந்தது அந்த இயந்திரத்திற்கு. அதற்கு அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகவில்லை. இயந்திரத்தின் பிரும்மாண்டமான உருக்குக் கை எல்லாவற்றையும் அனாயசமாகப் பற்றி இழுத்துப் புரட்டி ஒதுக்கிச் சரிவில் தள்ளியது. பிறகு சடசடவென ஓசையெழுப்பிக்கொண்டு மண்டபத்தை நோக்கி வந்தபோது வழியில் காமராஜரின் சட்டமிடப்பட்ட அந்தக் கருப்பு வெள்ளைப் புகைப்படம் கிடப்பதைப் பார்த்தான் இன்ஸ்பெகடர். அதை அங்கே நழுவவிட்டிருந்தது தானாகவே இருக்க வேண்டும் எனக் கருதியவன் அதுகுறித்துச் சிறுவனை எச்சரிக்க விரும்பினான். அதற்கு இடந்தராமல் இயந்திரத்தின் பற்சக்கரங்களிலொன்று அதை நசுக்குவதைப் பார்த்தான் இன்ஸ்பெகடர்இயந்திரம் உறுமியது. சிரித்துக்கொண்டே இயந்திரத்தின் உருக்குக் கையைச் சடலம் கிடத்தப்பட்டிருந்த மண்டபத்திற்குள் ஒரு பொறியாளனின் துல்லியத்தோடு லாவகமாகச் செலுத்தினான் அந்தச் சிறுவன். சடலத்தை எட்டியதும் மூர்க்கத்தைச் சிறிது தணித்துக்கொண்டது அந்த உருக்குக் கை. வருடிக்கொடுப்பதைப் போல சடலத்தின் சிரசிலிருந்து தொடங்கி பாதம் வரை மெதுவாக ஊர்ந்தது. இன்ஸ்பெகடர் உள்ளிட்ட மற்ற எல்லோரும் மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது தனது இரையைப் பற்ற முனையும் ஒரு மிருகம் போல தன் கூரிய நகங்களால் சடலத்தைப் பற்றி இழுத்தது பிரும்மாண்டமான அந்த உருக்குக் கை. சடக்கெனப் பேரோசையு டன் சடலம் முறிவதைக் கவனித்தான் இன்ஸ்பெக்டர். மேலெழும்பியபோது அதன் பிடியில் சடலத்தின் முறிந்த ஒற்றைக் கால். என்ன நடந்தது என்பது புரிந்துகொள்வதற்கு முய்னறுகொண்டிருந்தபோதே அந்த ஒற்றைக் காலை மற்ற எல்லோரிடமிருந்தும் விலகித் தனியாக நின்றுகொண்டிருந்த  இன்ஸ்பெக்டரின் காலடியில் அவன் கேட்டுக்கொண்டதைப் போலவே ஒரு சமர்ப்பணமாக வைத்தது அந்த உருக்குக் கை. பரிதவிப்புடன் குனிந்து அதைக் கையிலெடுக்க முயன்றான் இன்ஸ்பெக்டர். நம்ப முடியாத கனம். தன் காய்ப்பேறிய கைகளால் அதைப் பற்றவோ தூக்கவோ அவனுக்கு முடியவில்லை.

அவனது காலடியில் சமர்ப்பணமாக வைக்கப்பட்டது வெறும் கல். நேர்த்தியாக வடிக்கப்பட்டுக் கிடத்தப்பட்ட கற்சிலையொன்றின் உடைத்தெடுக்கப்பட்ட பகுதி. ஆழ்ந்த பெருமூச்சுடன் நிமர்ந்து பார்த்தபோது சடலத்தின் எஞ்சிய பகுதியை மீட்பதற்காக வெள்ளியங்கிரிப் புதூர் சுப்பிரமணியக் கவுண்டரின் உபய மண்டபத்திற்குள் நுழைந்திருந்தது அந்த இயந்திரத்தின் கருணையற்ற உருக்குக் கை.
***
கருத்துகள் இல்லை: